100 நதிகளின் நீர்... 5 அரசு சின்னங்கள்! ராஜகிரீடம் என மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற தாய்லாந்து மன்னர் முடிசூட்டு விழா புகைப்படங்கள்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

தாய்லாந்து நாட்டின் புதிய மன்னராக பொறுப்பேற்றுள்ள மஹா வஜிரா ரலாங்கர்னின் முடி சூட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

சுமார் 70 ஆண்டுகளாக தாய்லாந்து நாட்டை ஆட்சி செய்து வந்த மன்னர் பூமிபோல் அடுல்யதேஜ், கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபரில் உயிரிழந்தார்.

இதனால் அவரது மகன் மஹா வஜிரா ரலாங்கர்ன் புதிய அரசராக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் மஹா வஜிரா ரலாங்கர்னுக்கு இன்று முடிசூட்டு விழா தாய்லாந்தில் கோலகாலமாக நடைபெற்றது. நாட்டில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு முடிசூட்டு விழா நடப்பதால், நாடு முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

முடி சூட்டு விழா மூன்று நாட்கள் நடைபெறும் என்பதால், இன்று காலை தாய்லாந்து நாட்டின் புத்த மதம் மற்றும் ஹிந்து பிராமண முறைப்படி நடைமுறைகள் தொடங்கின.

மஹா வஜிரா மன்னராக முடிசூட்டுவதற்கு முன்னதாக வெள்ளை நிறத்திலான ஆடை அணிந்து அந்நாட்டு முறைப்படி சில மத சடங்குகளை செய்தார்.

அதன் பின், தாய்லாந்தில் உள்ள 100 புனித நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீர் மூலம் உடல் சுத்திகரிப்பு மற்றும் அபிஷேக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, மன்னருக்கே உரிய உடை அணிந்தபடி ஏழு வெண்குடைகள் சேர்ந்த ஆசனத்தில் அமரவைக்கப்பட்டார்.

அரியாசனத்தில் அமரவைக்கப்பட்ட அவருக்கு ராஜ கிரீடம், அரச செருப்புகள், விசிறி, ராஜ வாள் மற்றும் செங்கோல் போன்ற ஐந்து அரசுரிமை சின்னங்கள் வழங்கப்பட்டன.

இறுதியில் கிரீடம் அணிவிக்கப்பட்டு, மன்னராகப் பதவியேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள், அதிகாரிகள் முன்னிலையில் பதவியேற்புப் பிரமாணத்தை வாசித்தார்.

மூன்று நாள்கள் நடக்கும் இந்த விழாவில், இன்று நடக்கும் விழாவே முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறப்படுகிறது. ஞாயிற்றுக் கிழமையான நாளை, தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில் மன்னர் கலந்துகொள்ள உள்ளார்.

திங்கள் கிழமை முழுவதும் நாட்டு மக்களைச் சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers