துப்பாக்கிச்சூடு நேரலை ஆனது எப்படி? அதிரடி நடவடிக்கை எடுத்த நியூசிலாந்து பிரதமர்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

நியூசிலாந்தில்இரண்டு மசூதிகளில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தீவிரவாதி ஒருவர் நடத்திய தாக்குதல் நேரலை செய்யப்பட்டது எப்படி என, பேஸ்புக், யூடியூப் நிறுவனங்கள் உரிய விளக்கம் அளிக்க நியூசிலாந்து பிரதமர் ஜேசிண்டா ஆர்டர்ன் உத்தரவிட்டுள்ளார்.

நியூசிலாந்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 50 பேர் பலியாகியுள்ளனர். 48பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலக நாடுகளை உலுக்கிய இந்த பயங்கரவாத தாக்குதலை நடத்திய தீவிரவாதி பிரென்டன் டரேன்ட் அதனை பேஸ்புக்கில் லைவ் ஸ்ட்ரீம் செய்து வெளியிட்டார்.

அந்த வீடியோ, பேஸ்புக் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பல லட்சம் நபர்களால் பகிரப்பட்டன.

மேலும், லைவ் ஸ்ட்ரீம் 17 நிமிடங்கள் ஒளிபரப்பாகின. சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் யூடியூப் நிறுவன அதிகாரிகள், இதனை தடுக்காமல் என்ன செய்தனர் என்ற கேள்வியையும் ஜேசிண்டா முன்வைத்துள்ளார்.

நியூசிலாந்தின் பேஸ்புக் அதிகாரி மியா கார்லிக், பிரதமர் ஜேசிண்டவின் இந்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில், சம்பவம் நடந்த முதல் 24 மணி நேரத்தில், 1.5 மில்லியன் வீடியோக்களை உலகளவில் அப்புறப்படுத்தியுள்ளதாகவும், 1.2 மில்லியன் வீடியோக்களை அப்லோடு ஆகாமல் தடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து பேசிய அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், சமூக ஊடகங்களை மேலும் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், அதிக அளவில் இதுபோன்ற ஊடகங்களுக்கு இடமளிப்பதை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

சமூக அக்கறை கொஞ்சம் கூட இல்லாமல், இதுபோன்ற படுகொலை சம்பவங்களை நேரலையில் ஒளிபரப்பும் அதிகாரத்தையும் ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் காட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்