நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச் சூடு..உண்மையில் நடந்தது என்ன? அப்படியே விளக்கும் அங்கிருக்கும் தமிழன்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

நியூசிலாந்தில் இருவேறு மசூதிகளில் துப்பாக்கித்தாரிகள் நடத்திய தாக்குதலில் தொழுகையில் ஈடுபட்டு கொண்டிருந்த பெண்கள் உள்பட 40 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சுமார் 48 லட்சம் மக்கள் தொகையை கொண்ட நியூசிலாந்து, வடக்கு தீவு, தெற்கு தீவு என இரண்டு மிகப் பெரிய தீவுகளாக பிரிந்துள்ளது. அதில், தெற்கு தீவில் அமைந்துள்ள மிகப் பெரிய நகரமான கிரைஸ்ட்சர்ச்சில்தான் இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து மேலதிக விடயங்களை தெரிந்துகொள்வதற்காக, தற்போது கிரைஸ்ட்சர்ச் நகரத்தில் பணியாற்றி வரும் தமிழகத்தை சேர்ந்த செல்வ கணபதியை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது.

என்ன நடந்தது?

"கிரைஸ்ட்சர்ச் நகரத்தின் மையப்பகுதியில் உள்ள அல்-நூர் எனும் மசூதியில் துப்பாக்கிச்சூடு நடந்துவருவதாக மதியம் சுமார் இரண்டு மணியளவில் அலுவலகத்தில் நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.

அதாவது, தாக்குதல் நடைபெற்ற இடம் எனது அலுவலகத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவிலுள்ளது.

தொடக்கத்தில் ஏதோ சிறியளவிலான பிரச்சனையாக இருக்குமென்று நினைத்த நிலையில், நகரத்தின் காவல்துறை ஆணையர் இதுகுறித்து தொலைக்காட்சியில் விளக்கியவுடேனே பிரச்சனையின் வீரியத்தை புரிந்துகொண்டோம்.

அடுத்த சில நிமிடங்களிலேயே காவல்துறை வாகனங்களும் ஹெலிகாப்டர்களும் சம்பவ இடத்தை நோக்கி சென்றதை காண முடிந்தது" என்று கூறுகிறார் செல்வ கணபதி.

தாக்குதல் நடப்பது குறித்து உறுதிசெய்யப்பட்ட 15 நிமிடங்களில் அந்நகரம் முழுவதுமுள்ள பள்ளிகள், கல்லூரிகள், அலுவவலகங்கள் என அனைத்தும் மாணவர்கள், ஊழியர்களை வெளியேற்றாமல் மூடப்பட்டுவிட்டது.

மேலும், இரண்டு மசூதிகளுக்கு அருகிலுள்ள வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டுகள் காவல்துறையினரால் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

"கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் ஆகியவற்றிலுள்ளவர்களை ஒரே சமயத்தில் வெளியேற்றினால் நிலைமை கட்டுக்குள் கொண்டு வருவது கடினம் என்பதால் யாரும் வெளியே செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.

அடுத்த இரண்டு, மூன்று மணிநேரங்களில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, இந்த கோர சம்பவத்தில் 40 பேர் பலியானதாக பிரதமர் ஜெசிந்தா அறிவித்தார். அதைத்தொடர்ந்து, அனைவரும் தத்தமது வீடுகளுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்" என்று செல்வ கணபதி கூறுகிறார்.

"நினைத்துகூட பார்க்க முடியவில்லை"

தற்போதைய நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு பெண் உள்பட நான்கு பேர் கைதுசெய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக கிரைஸ்ட்சர்ச் நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கித்தாரிகளில் ஒருவர், ஆஸ்திரேலியர் என்பதும், அவர் குடியேற்றத்துக்கு எதிரான தீவிர வலதுசாரி கொள்கையை அடிப்படையாக கொண்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், நியூசிலாந்தில் குடியேற்றத்துக்கு எதிரான மனப்போக்கு மக்களிடையே உள்ளதா என்று செல்வ கணபதியிடம் கேட்டபோது, "கிரைஸ்ட்சர்ச் நகரில் மட்டும் சுமார் 150க்கும் மேற்பட்ட மொழிகளை பேசுபவர்கள் மதம், சாதி, நிறம், நாடு உள்ளிட்ட எவ்வித வேறுபாடுமின்றி அன்பு, பரிவு, கனிவு ஆகியவற்றை மட்டும் அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

எனவே, இந்த தாக்குதலை நடத்தியவர்கள் எப்படி குடியேற்றத்துக்கு எதிரான கொள்கையை கொண்டு செயல்பட்டார் என்பது எனக்கு புரியவில்லை" என்று கூறுகிறார்.

"அனைத்து நாடுகளிடமிருந்தும் வரும் குடியேறிகளை அடைக்கலம் கொடுத்து, அவர்களது வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கான உதவிகளை நியூசிலாந்து செய்து வருகிறது.

அதுவும், நாட்டின் கிழக்கு கடலோரத்தில் அமைந்துள்ள கிரைஸ்ட்சர்ச் நகரம் புவியியல்ரீதியாகவும் மிகவும் அழகானது.

இப்படிப்பட்ட நகரத்தில், முன்னெப்போதும் இல்லாத வகையில் இதுபோன்ற கோர சம்பவம் நடைபெற்றுள்ளதை சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என்று கூறுகிறார் இரண்டு வருடங்களாக கிரைஸ்ட்சர்ச் நகரத்தில் வசித்துத் வரும் செல்வ கணபதி.

இஸ்லாமிய வெறுப்பு காரணமா?

கிரைஸ்ட்சர்ச் நகரத்தில் நடைபெற்ற இருவேறு தாக்குதலும் அங்குள்ள மசூதிகளில் நடைபெற்றுள்ளது.

எனவே, இந்த தாக்குதலுக்கு பின்னணியாக இஸ்லாமிய மத எதிர்ப்பு இருக்குமா என்று செல்வ கணபதியிடம் கேட்டபோது, "நியூசிலாந்தை பொறுத்தவரை மக்களிடையே எவ்வித பிரிவினையும் அறவே இல்லை என்று என்னால் உறுதியாக கூற முடியும்.

ஏனெனில், இங்கு ஒவ்வொருவரின் மதரீதியான உணர்வும் மதிக்கப்படுவதுடன், கண்ணியத்துடன் நடத்தப்படுகிறது.

பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் இத்தனை ஆண்டுகளாக எவ்வித பிரச்சனையுமின்றி அமைதியாக வாழ்ந்து வந்த நிலையில், இதுபோன்றதொரு தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாமல் பலரும் மன வேதனையில் உள்ளனர்" என்று அவர் கூறுகிறார்.

முன்னதாக, கிரைஸ்ட்சர்ச்சின் ஹாகிலே பூங்காவுக்கு அருகிலுள்ள மற்றொரு மசூதியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டிலிருந்து, நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணியினர் பத்திரமாக வெளியேறிவிட்டாக பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

"நாங்கள் அனைவரும் துப்பாக்கித்தாரிகளிடமிருந்து காப்பாற்றப்பட்டுவிட்டோம். இந்த பயமுறுத்தும் அனுபவத்திலிருந்து மீண்டு வருவதற்கு எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்" என்று வங்கதேச கிரிக்கெட் அணியின் வீரர் தமீம் இக்பால் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

- BBC - Tamil

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்