மலேசியாவிலிருந்து 239 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் என்ன ஆனது என்பதே தெரியாத நிலையில், மீண்டும் அதை தேடுதல் பணி தொடர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவிற்கு கடந்த 2014-ஆம் ஆண்டு 239 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற எம்.ஹெச்.370 என்ற பயணிகள் விமானம் மாயமானதால், அதை தேடும் பணி மும்பரமாக நடைபெற்றது.
சுமார் 12,000 சதுர கிலோ மீற்றர் பரப்பளவு கொண்ட கடல்பகுதியில் மிகத் தீவிரமாக தேடுதல் பணி நடைபெற்றது.
குறிப்பாக அவுஸ்திரேலியாவில் இருந்து, விமானங்களைக் கண்டறியும் பிரபல கப்பல் நிறுவனமும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. ஆனால், எந்த விதத்திலும் துப்பு துலங்காததால், கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.
ஆனால் உறவினர்கள் விமானத்தில் சென்றவர்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்து வேதனையில் இருந்ததால், அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று கடந்த ஆண்டு தனிப்பட்ட முறையில் தேடுதல் பணியை தொடங்கியது. பல மாதங்களுக்குப் பிறகு அந்த முயற்சியும் தோல்வியடைந்தது.
இந்நிலையில் நேற்று இந்த விமானம் மாயமாகி ஐந்து ஆண்டு நிறைவடைந்ததால், விமானத்தை தேடும் பணியை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும், அதில் பயணித்தவர்களின் உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து மலேசிய போக்குவரத்து துறை அமைச்சர் கிரேஸ் நாதன், விமானத்தை தேட வேண்டும் என்ற கோரிக்கையை அரசு பரிசீலிக்கும் என்று தெரிவித்திருந்தார். அமைச்சர் கிரேஸ் நாதனின் தாயாரும் இந்த விமானத்தில் பயணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.