ஒப்பந்தத்தை மீறி எப்-16 போர் விமானத்தை தவறாக பயன்படுத்தியதா பாகிஸ்தான்? தீவிர விசாரணையில் அமெரிக்கா

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

காஷ்மீர் எல்லைப்பகுதியில் எப்-16 ரக போர் விமானத்தை பாகிஸ்தான் பயன்படுத்தியதா என்பது குறித்து அமெரிக்கா தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

அதனைத் தொடர்ந்து, காஷ்மீர் எல்லைப்பகுதியில் இந்தியா மீது குண்டு வீச பாகிஸ்தான் போர் விமானங்களை பயன்படுத்திய நிலையில், அவற்றில் 2 விமானங்களை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.

அதன் பின்னர் அந்த விமானங்களை ஆய்வு செய்ததில், அவை எப்-16 ரக விமானங்கள் என்றும், அந்த விமானங்கள் அமெரிக்காவிடம் இருந்து பாகிஸ்தானால் வாங்கப்பட்டவை என்பது தெரிய வந்தது.

அமெரிக்கா ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் இந்த விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது. அதாவது பயங்கரவாதிகள் மீதான தாக்குதலுக்கு மட்டுமே இந்த எப்-16 ரக விமானங்களை பயன்படுத்த வேண்டும் என்பதே ஆகும்.

ஆனால், இந்த ஒப்பந்தத்தை மீறி இந்த தாக்குதல் நடத்தப்பட்டதால் அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், சுட்டு வீழ்த்தப்பட்ட எப்-16 விமானத்தின் வீடியோ, புகைப்படங்கள் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களுடன் இந்தியா அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில், எப்-16 ரக விமானங்களை பயன்படுத்தவில்லை என பாகிஸ்தான் மறுத்துள்ளது. எனினும், இந்தியாவின் அறிக்கையை அடிப்படையாக வைத்து அமெரிக்கா பாகிஸ்தானிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

இதுகுறித்து அமெரிக்க அரசின் துணை செய்தி தொடர்பாளர் ராபர்ட் பல்லாடினோ கூறுகையில்,

‘இந்தியாவின் அறிக்கை மூலம் இப்பிரச்சனையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இந்த விவகாரம் குறித்து நான் எதுவும் வெளிப்படையாக கூற முடியாது. இருந்தாலும் ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதா? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers