தாய்லாந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த பஹ்ரைன் கால்பந்து வீரர், அவுஸ்திரேலியாவிற்கு திரும்பிய நிலையில் இந்த மண்ணில் தான் இறப்பேன் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர் ஹக்கிம் அல் அரைபி(25), கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டதாகவும், அப்போது பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டார்.
ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்து வந்த நிலையில், 2014ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்றார். அங்கு அவருக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டது. மேலும் அங்குள்ள கால்பந்து கிளப் ஒன்றுக்காக விளையாட ஆரம்பித்தார்.
இந்நிலையில், ஹக்கிம் தனது மனைவியுடன் தேனிலவு கொண்ட கடந்த நவம்பர் மாதம் தாய்லாந்து சென்றார். இதனை அறிந்த பஹ்ரைன் அரசு ஹக்கிமை தாய்லாந்தில் கைது செய்ய இன்டர்போல் உதவியை நாடியது. அதனைத் தொடர்ந்து தாய்லாந்து குடிவரவு அதிகாரிகள் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவரை, தங்கள் நாட்டுக்கு நாடு கடத்த பஹ்ரைன் கோரிக்கை விடுத்தது. ஆனால், பஹ்ரைனுக்கு நாடு கடத்தப்பட்டால் தான் சித்திரவதை செய்யப்படலாம் என்றும், தன்னை அங்கு அனுப்ப வேண்டாம் என்றும் ஹக்கிம் கோரிக்கை வைத்தார்.
இதற்கிடையில், அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தாய்லாந்து அரசுக்கு எழுதிய கடிதத்தில் ஹக்கிமை விடுதலை செய்து திரும்ப அவுஸ்திரேலியாவுக்கு அனுப்ப வேண்டும் என்று கோரியிருந்தார். அத்துடன் அவுஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சரும் இதுதொடர்பாக தாய்லாந்து அதிகாரிகளிடம் முறையிட்டார்.
இதன் காரணமாக தாய்லாந்து அரசால் ஹக்கிம் நேற்று விடுதலை செய்யப்பட்டார். அவுஸ்திரேலியாவுக்கு திரும்பிய அவர், மெல்போர்ன் விமான நிலையத்தில் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
‘எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி. அவுஸ்திரேலியாதான் எனது தாய் நாடு. எனக்கு இன்னும் குடியுரிமை வழங்கப்படவில்லை என்றாலும் எனது நாடு இதுதான்.
அவுஸ்திரேலியாவை தான் விரும்புகிறேன். இந்த மண்ணில் தான் நான் இறப்பேன்’ என தெரிவித்தார். இந்த விடயம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.