ஐபோனுக்காக கிட்னியை விற்ற இளைஞரின் தற்போதைய நிலை தெரியுமா?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஐபோன் மோகம் ஒருவரின் வாழ்க்கையை எந்த அளவுக்கு சிதைக்கும் என்பதற்கு 2011 ஆம் ஆண்டு சீன இளைஞர் சிறுநீரகத்தை விற்ற சம்பவம்தான் எடுத்துக்காட்டு.

குறித்த இளைஞரின் தற்போதைய நிலையைச் சீன ஊடகம் ஒன்று செய்தியாக வெளியிட்டுள்ளது.

ஐபோன் 4 வெளியான காலகட்டத்தில் சீனாவைச் சேர்ந்த 17 வயது இளைஞர் சியாவோ வாங் என்பவருக்கு அதன் மீது மோகம் ஏற்பட்டது.

ஆனால், அதற்கான பணத்தை அவரால் திரட்ட முடியவில்லை. இதனிடையே இணையத்தில் சிறுநீரகம் விற்பது பற்றிய விளம்பரம் ஒன்று அவரின் கண்களில் தென்பட்டது.

சற்றும் யோசிக்காமல், விளம்பரம் கொடுத்திருந்த இடைத்தரகரைத் தொடர்புகொண்டு பேசினார். சட்டத்துக்குப் புறம்பாக சிறுநீரகம் விற்பனை செய்யும் மருத்துவமனை ஒன்றுக்கு சியாவோ அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு அவரின் சிறுநீரகம் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது. அதன்மூலம் அவருக்குக் கிடைத்த தொகை 3,200 டொலர்.

அந்தத் தொகையை வைத்து ஐபோன் ஒன்றை வாங்கினார் சியாவோ. ஆனால், அறுவை சிகிச்சை செய்ததில் இருந்தே அவரின் உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக மோசமடைந்தது.

மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு சிறுநீரகம் இல்லாத நிலையில் சியாவோவின் இன்னொரு சிறுநீரகத்திலும் நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தது.

முன்னர் சியாவோவுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் முறையாகச் செய்யவில்லை. காயம் சரியாக ஆறாமல் தொற்று ஏற்பட்டு இன்னொரு சிறுநீரகத்துக்கும் பரவியிருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதைக் கேட்ட சியாவோ அதிர்ச்சியில் உறைந்து போனார். வேறு வழியில்லாமல் தற்போது தினமும் டயாலிசிஸ் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

மேலும், சிகிச்சைக்குச் செலவழிக்கப் பணமில்லாமல் அவரின் குடும்பம் கடும் அவதிக்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது. ஐபோன் மோகம் ஒரு இளைஞரின் வாழ்க்கையே பாழாக்கிவிட்டது என அந்த சீன ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்