சவுதி பத்திரிகையாளரின் கடைசி வார்த்தைகள்: உறுதி செய்த பிரபல தொலைக்காட்சி

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

சவுதி பத்திரிகையாளர் ஜமால் உயிரிழக்கும் முன் கடைசியாக ‘என்னால் மூச்சு விட முடியவில்லை’ என்று கூறியதாக பிரபல தொலைக்காட்சி ஒன்று தெரிவித்துள்ளது.

ஜமாலின் கடைசி தருணங்களைப் பதிவு செய்த ஒரு ஆடியோவிலிருந்த விடயங்கள் எழுத்தில் அச்சிடப்பட்ட அறிக்கையை வாசித்த ஒருவரை மேற்கோள் காட்டி இந்த தகவலை அந்த தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கை, ஜமாலின் கொலை முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்பதை தெளிவாகக் காட்டுவதாகவும், எவ்வாறு கொலை செய்ய வேண்டும் என்பதைக் குறித்து விவரிப்பதற்காக பல தொலைபேசி அழைப்புகள் செய்யப்பட்டதையும் தெளிவுபடுத்துகிறது.

அந்த அழைப்புகள் ரியாதிலுள்ள உயர்மட்ட அதிகாரிகளுக்கு செய்யப்பட்டதாக துருக்கி அதிகாரிகள் நம்புவதாகவும் அந்த தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கை, தன்னைக் கொல்லும் கொலைகாரர்களுடன் ஜமால் போராடியதையும், அந்த ஆடியோவில் கேட்ட ஒலிகளை வைத்துப் பார்க்கும்போது, அவர் ஒரு அரத்தால் கொடூரமாக துண்டுகளாக அறுக்கப்பட்டு கொல்லப்பட்டதையும் விவரிக்கிறது.

இந்நிலையில் சவுதி அரேபிய வெளியுறவுத்துறை அமைச்சர், ஜமால் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படுவோரை தங்களிடம் ஒப்படைக்கவேண்டும்

என்னும் துருக்கி அதிபர் எர்டகானின் கோரிக்கையை நிராகரித்து விட்டார்.

துருக்கியைப் பொருத்தவரையில், ஜமாலைக் கொல்ல 15 உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்று இஸ்தான்புல்லுக்கு அனுப்பப்பட்டதாக அது நம்புகிறது.

ஆனால் சவுதியோ, விசாரணையின்போது நடந்த தவறால் ஜமால் உயிரிழந்ததாக கிளிப்பிள்ளை போல் திரும்பத் திரும்பக் கூறி வருகிறது.

இந்த சம்பவம் சர்வதேச அளவில் சவுதி அரேபியாவின் பெயர் கெட்டுப்போக காரணமாக அமைந்து விட்டதோடு அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் கனடா உட்பட பல நாடுகள் சவுதியைச் சேர்ந்த சுமார் 20 பேர் மீது பல தடைகளை விதிக்கவும் காரணமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers