பாகிஸ்தானுக்கு ஒரு டொலர் கூட கொடுக்கக் கூடாது: ஐநா சபை பிரதிநிதி நிக்கி ஹாலே திட்டவட்டம்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதால், பாகிஸ்தானுக்கு ஒரு டொலர் கூட கொடுக்கக் கூடாது என அமெரிக்காவுக்கான ஐ.நா சபை பிரதிநிதி நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கும், ராணுவத்திற்கும் அமெரிக்கா ஆண்டுதோறும் அந்நாட்டிற்கு நிதியுதவி வழங்கி வந்தது. ஆனால், பாகிஸ்தானால் தங்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை எனக் கூறி, ஜனாதிபதி டிரம்ப் கடந்த செப்டம்பர் மாதம் நிதியை நிறுத்திவிட்டார்.

இந்நிலையில், ஐ.நா சபையின் பிரதிநிதியாக உள்ள நிக்கி ஹாலே பாகிஸ்தானுக்கான நிதியுதவி குறித்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு எதிராக செயல்படும் நாடுகளுக்கு ஒரு டொலர் கூட அமெரிக்கா நிதியுதவி அளிக்கக் கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘சில விடயங்களில் எந்தெந்த நாடுகளுடன் உறவு வைத்துக் கொள்வது, எந்தெந்த நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவது என்பது குறித்து நன்கு ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஏனெனில், நாம் கண்ணை மூடிக்கொண்டு ஏராளமான நிதியுதவிகளை அளித்து வருகிறோம். அதற்கு பதில், அந்த பணத்தில் நாமே நடவடிக்கை எடுக்க முடியும். உதாரணத்திற்கு, பாகிஸ்தானை எடுத்துக் கொள்ளுங்கள்.

அந்த நாட்டுக்கு பில்லியன் கணக்கில் அமெரிக்கா நிதியுதவி வழங்கியது. ஆனால், அமைதிப் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க வீரர்களை, தீவிரவாதிகள் கொன்று வருகின்றனர். அவர்களுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவும், அடைக்கலமும் கொடுத்து வருகிறது.

எனவே, பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒரு டொலர் கூட நிதியுதவி கொடுக்கக் கூடாது. முதலில் அவர்கள் தீவிரவாதிகளை ஒடுக்கட்டும். நல்ல விடயங்கள் நடந்தால், அதன்பிறகு நிதியுதவி செய்யலாம்’ என தெரிவித்துள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு ஐ.நா-வுக்கான பிரதிநிதியாக பொறுப்பேற்ற நிக்கி ஹாலே, இந்த ஆண்டு இறுதியில் பதவி விலகுகிறார். மேலும் அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பிரதிநிதி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers