அகதி குடும்பத்தை காப்பாற்ற திரளும் மக்கள்.. 800 மணி நேர பிரார்த்தனை! உலகம் திரும்பி பார்க்கும் நிகழ்வு

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

நெதர்லாந்து மக்கள் ஆர்மீனிய நாட்டைச் சேர்ந்த அகதி குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகத் தொடர்ந்து 37-வது நாளாக ஆலயத்தில் பிரார்த்தனை நடத்தி வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்மீனியாவைச் சேர்ந்தவர் சூசன் டம்ரஸ்யன். அரசியல்வாதியான இவருக்கு ஆர்மினியாவில் உயிர் வாழ முடியாத நிலை. இதனால், குடும்பத்தினருடன் நெதர்லாந்தில் தி ஹேக் நகரில் அரசியல் தஞ்சமடைந்தார்.

கடந்த 2009-ம் ஆண்டு முதல் இவர்கள் நெதர்லாந்தில் வசித்து வருகின்றனர். இவரின் குழந்தைகள், நெதர்லாந்து கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்து விட்டனர். நெதர்லாந்துக்குள் தஞ்சமடைந்த இவர்களை வெளியேற்ற முதலிலேயே அரசு முயன்றது. ஆனால், நீதிமன்றம் அரசின் முடிவைத் தடுத்துவிட்டது.

தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து அரசு அதில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் டம்ஸ்ரயன் குடும்பத்தினரைக் கைது செய்து நாட்டை விட்டு வெளியேற்ற நெதர்லாந்து பொலிஸ் முடிவு செய்தது.

நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டதையடுத்து, டம்ஸ்ரயன் குடும்பம் திஹேக் நகரில் உள்ள பெத்தேல் ஆலயத்தின் கதவுகளை அக்டோபர் 25- ந் திகதி இரவு தட்டியது. தங்கள் இயலாமையை ஆலயத்தில் இருந்த போதகர்களிடம் கண்ணீருடன் முறையிட்டார் டம்ஸ்ரயன்.

அவர்களுக்கு உதவ ஆலய நிர்வாகம் முடிவெடுத்தது. நெதர்லாந்து நாட்டுச் சட்டப்படி ஆலயத்தில் பிரார்த்தனை வேளையில் பொலிசார் ஆலயத்துக்குள் நுழையக் கூடாது. அக்டோபர் 26-ந் திகதி முதல் தற்போது வரை தொடர்ந்து 37- வது நாளாக ஆலயத்தில் இரவு பகலாக பிரார்த்தனை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்காக 500 பாதிரியார்கள் நெதர்லாந்தின் பல பகுதிகளிலிருந்து பெத்தேல் ஆலயத்துக்கு வந்து குவிந்துள்ளனர்.

அவ்வப்போது பொலிசார் ஆலயத்துக்கு வந்து பிரார்த்தனை முடிந்து விட்டதா என்று பார்த்து விட்டுச் செல்கின்றனர். ஆலய நிர்வாகமோ பிரார்த்தனையை நிறுத்தும் முடிவில் இல்லை.

இதுவரை 800 மணி நேரம் தொடர்ந்து பிரார்த்தனை செய்யப்பட்டுள்ளது. சபையைச் சேர்ந்த மக்களும் அகதி குடும்பத்தினரைக் கனிவுடன் கவனித்துக் கொள்கின்றனர். பிரார்த்தனையில் 100 பேர் கலந்து கொள்கிறார்கள்.

இது குறித்து ஆலயத்தின் தலைமை போதகர் தியோ ஹெட்மா கூறுகையில், இந்த மாரத்தான் பிரார்த்தனை தேவைப்பட்டால் தொடர்ந்து நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும். கடவுளை மட்டுமல்ல நம்மைச் சுற்றியிருப்பவர்களையும் நாம் நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

எங்களை நம்பி அடைக்கலம் புகுந்தவர்களை கைவிட நாங்கள் தயாரா இல்லை. எங்களால் முடிந்தவரை இவர்களைக் காப்பாற்ற முயல்கிறோம். இந்தத் திட்டம் எந்தளவுக்கு வெற்றி பெறும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது என கூறியுள்ளார்.

மக்களிடமும் சூசன் குடும்பத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers