அந்தமான் ஆதிவாசிகள் ஏன் வெளியாட்களைத் தாக்குகிறார்கள்: பகீர் கிளப்பும் பின்னணி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

அந்தமான் - நிகோபார் தீவுகளில், வெளியுலகுடன் எந்தவித தொடர்பும் இல்லாமல் பல்லாயிரம் ஆண்டுகளாக வசித்துவரும் பழங்குடி மக்கள் வெளியாட்களை ஏன் தாக்குகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சென்டினல் பழங்குடி மக்களுக்கு மிக நீண்ட பாரம்பர்யம் உள்ளது எனவும் அவர்களின் பூர்வீகத்தின்மீது அவர்களுக்கு மிகப்பெரிய பற்றுதல் இருக்கிறது எனவும் குறிப்பிடுகிறார் மானுடவியல் பேராசிரியரான பக்தவத்சல பாரதி.

ஆரம்பக்காலத்தில் இருந்தே வெளியாட்களை அவர்களின் நிலத்துக்குள் அனுமதிப்பதில்லை. அவர்களின் தீவை யார் நெருங்கினாலும், ஆபத்து நெருங்கிவிட்டதாகத்தான் உணர்வார்கள். வெளியில் இருந்து யார் அவர்களின் நிலத்துக்குள் சென்றாலும் அவர்களின் காட்டை அழிக்க வருவதாகத்தான் நினைத்துக்கொள்வார்கள் எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

மேலும், காட்டு வளங்களை அபகரிப்பதற்காகச் சென்று, அதைத் தடுக்க முயன்ற பல பழங்குடிகள் ஆங்கிலேயர் காலத்தில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

அதன் காரணமாகப் பழங்குடி மக்கள் பலர் இறந்து போயிருக்கிறார்கள். வெளியில் இருந்து யார் வந்தாலும் அவர்களின் காட்டை அபகரித்துவிடுவார்கள் என்கிற அச்சம் அவர்களுக்கு எப்போதும் இருக்கும்.

அதன் காரணமாகத்தான் அவர்கள் அப்படி நடந்துகொள்கிறார்கள். தற்காப்புக்காக மட்டும்தான் அவர்கள் பிறரைத் தாக்குகிறார்கள். அவர்களுக்குத் தேவையான விஷயங்கள் அனைத்துமே காட்டிலேயே கிடைத்துவிடுகின்றன.

தன்னிறைவான ஒரு வாழ்க்கையைத்தான் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அதனால் மற்றவர்களின் எந்த உதவியும் அவர்களுக்குத் தேவையில்லை.

அவர்களை மேம்படுத்தும் எண்ணத்துடன் யாராவது தீவுக்குள் சென்றாலும்கூட, அவர்களுக்கு எதிராக வருவதாகத்தான் நினைத்துக்கொள்வார்கள் என்கிறார் பக்தவத்சல பாரதி.

அந்தமான் தீவில் வாழும் பல்வேறு பழங்குடி மக்கள் வெளி உலகத்துடன் நெருக்கமாக வந்துகொண்டிருக்கிறார்கள். சென்டினல்கள், ஜாரவா போன்ற பழங்குடி மக்கள்தான் இன்னும் தனித்துவத்துடன் வாழ்ந்து வருகிறார்கள்.

மட்டுமின்றி சென்டினல் மக்களுக்கு வெளியுலகில் இருக்கும் நோய்களை எதிர்க்குமளவுக்கு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி இருக்காது.

மற்றவர்களிடமிருந்து அவர்களுக்குத் தொற்றுநோய்கள் பரவக்கூடிய ஆபத்தும் இருக்கிறது அதனால்தான் அங்கு யாரும் செல்லக் கூடாது என அறிவுறுத்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers