அவமானம் தாங்காமல் அறுவை சிகிச்சைக்கு சென்ற மணமகள்: திருமணத்திற்கு முன்னர் பரிதாப பலி

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

பெல்ஜியம் நாட்டில் உடல் எடை அதிகமாக இருந்ததால், அவமானம் தாங்காமல் அறுவை சிகிச்சைக்கு சென்ற இளம்பெண் பரிதாபமாக பலியாகியுள்ள சோக சம்பவம் நடந்துள்ளது.

பெல்ஜியம் நாட்டை சேர்ந்த ஜனா மோரேல்ஸ் என்ற 25 வயது பெண்ணுக்கு அக்டோபர் 12ம் தேதி தன்னுடைய காதலனுடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஒருமுறை சர்க்கஸ் நிகழ்ச்சிக்கு சென்ற ஜனாவிற்கு அங்கிருந்த இடுப்பு பெல்ட் சரிவர பொருந்தவில்லை.

இதனை தனக்கு நேர்ந்த அவமானமாக கருதிய ஜனா, திருமணத்திற்கு முன்னர் இரைப்பை அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தார்.

அதன்பேரில் அவருக்கு அக்டோபர் 17ம் தேதியன்று இரைப்பை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, 2 நாட்கள் ஓய்விற்கு பின்னர், மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இரண்டு வாரங்கள் கழித்து ஜனாவிற்கு பிறந்தநாள் வந்தது. பிறந்தநாள் விழாவின் போது முதுகுப்பகுதி வலிப்பதாக ஜனா கூறியுள்ளார்.

உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை மேற்கொண்டனர். அங்கு அவருடைய உடலில் எந்த மாறுதலையும் மருத்துவர்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை.

நவம்பர் 8ம் தேதியன்று ஜனாவிற்கு முதுகுவலியின் தீவிரம் அதிகமாகியுள்ளது. மீண்டும் மருத்துவமனை சென்ற ஜனாவிற்கு நுரையீரல் நோய்த்தொற்று மற்றும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் ஒரு பகுதி திசுக்கள் இறந்துவிட்டன. உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளார்.

மருத்துவர்கள் தீவிரமாக முயற்சி மேற்கொண்ட போதிலும், உடல்நிலை வேகமாக சீர்குலைந்து வந்துள்ளது. கல்லீரல் பாதிக்கப்பட்டு ஜனா கோமா நிலைக்கு சென்றுள்ளார்.

ஆபரேஷனில் அவருக்கு பொருத்தப்பட்ட கல்லீரலும், அவருடைய உடலால் நிராகரிக்கப்பட்டுள்ளது. 4 நாட்களுக்கு பின்னர் மீண்டும் பரிசோதனை மேற்கொண்டதில், அவருடைய இரைப்பை பைபாஸ் இணைப்பில் ஒரு கசிவு இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதனையடுத்து ஜனா ஒரு கடுமையான அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். நவம்பர் 23ம் தேதி ஜனாவிற்கு மீண்டும் ஒரு புதிய கல்லீரல் பொருத்தப்பட்டது. ஆனால் அவருடைய உடல் மோசமான நிலையில் இருந்ததால், அன்று இரவே பரிதாபமாக பலியாகியுள்ளார்.

29ம் தேதி அவருடைய திருமணம் நடைபெற இருந்ததால், இறந்த அன்று தான் திருமணத்திற்கான ஆடைகளை வாங்க திட்டமிட்டிருந்தோம் என ஜனாவின் அம்மா வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers