189 பேர் பலியான இந்தோனேசியா பயங்கர விமான விபத்திற்கு காரணம் என்ன? வெளியான தகவல்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

இந்தோனேசியாவின் ஜகர்தா நகரின் சோய்கர்னோ ஹட்டா விமான நிலையத்தில் இருந்து லயன் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று காலை 6.20 மணிக்கு வழக்கம்போல் சுமத்ரா தீவில் உள்ள பங்க்கால் பினாங்க்குக்கு புறப்பட்டு சென்றது.

இந்த விமானத்தில் பயணிகள், ஊழியர்கள், விமானிகள் உட்பட 189 பேர் பயணம் செய்தனர். ஒரு குழந்தை மற்றும் இரண்டு பச்சிளங்குழந்தைகளும் இருந்தன.

விமானத்தை இந்தியாவை சேர்ந்த விமானியான பாவ்யே சுனேஜா இயக்கினார். விமானம் புறப்பட்டு 10வது நிமிடத்தில் விமான நிலைய கட்டுப்பாடு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

விமானம் என்ன ஆனது என தெரியாததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக விமானத்தை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.

கடற்படையினர் மற்றும் மீட்பு குழுவினரின் சில மணி நேர தேடுதல் முயற்சிக்கு பின்னர் மேற்கு ஜாவா தீவு கடல் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது உறுதிப்படுத்தப்பட்டது.

சம்பந்தப்பட்ட கடல் பகுதிக்கு மீட்பு படைகள் விரைந்துள்ளன. விமானத்தின் பல்வேறு பாகங்கள் கடல் பகுதியில் மிதப்பதை மீட்பு குழுவினர் கண்டறிந்தனர்.

விமானத்தில் பயணம் செய்தவர்களின் உடமைகளும் கடலில் மிதந்தன. விமானிகள் உட்பட விமானத்தில் பயணம் செய்த அனைவரும் கடலில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. எனினும், விமானம் விழுந்ததாக கூறப்படும் கடல் பகுதியில் பயணிகள் யாரேனும் உயிருடன் உள்ளனரா என படகு மூலம் மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர்.

கடலில் மூழ்கி இறந்தவர்களின் சடலங்களை தேடும் பணியிலும் மீட்பு குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

விமான விபத்து தொடர்பான முதல்கட்ட விசாரணையில் இந்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டு சமீபத்தில் சரி செய்யப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது. இந்த கோளாறால் விமானம் விபத்துக்கு உள்ளானதா அல்லது மோசமான வானிலை ஏற்பட்டதா என்று விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

கறுப்பு பெட்டியை மீட்டால், கடைசிக்கட்ட தகவல்கள் மூலம் விமானம் எதனால் விபத்துக்கு உள்ளானது என்பது தெரியும் என்பதால், அதை தேடும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers