வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற தமிழக இளைஞனுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை! மகனை காப்பாற்றுப்படி கதறி அழுத தாய்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

மலேசியாவில் வேலை பார்க்கும் என் மகனை அடித்து துன்புறுத்துவதால் அவனை எப்படியாவது மீட்டுத் தரும் படி தாய் கண்கலங்கிய நிலையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்த சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது.

தமிழகத்தின் பட்டுக்கோட்டை ஏனாதி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன். கடந்த ஆண்டு மலேசியா சென்ற இவர், அங்குள்ள சலூன் கடையில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் திடீரென்று அங்கிருந்த சிலர் வீரப்பனை மிரட்டி கொடுமைபடுத்தியுள்ளனர். இதனால் பயந்து போன வீரப்பன் ஊருக்கு திரும்புவதற்காக கடையின் முதலாளியிடம் கூறியுள்ளார்.

அவரோ சரி பார்க்கலாம் என்று அப்போதைக்கு சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளார்.

அதன் பின்பு 3 நாட்கள் கழித்து கடையில் 2 லட்சம் ரூபாய் பணத்தைக் கையாடல் செய்துவிட்டதாகக் கூறி ஊருக்கு அனுப்பாமல் கடை உரிமையாளர் வீரப்பனை அடித்துத் துன்புறுத்தியுள்ளார்.

அதுமட்டுமின்றி வீரப்பனின் குடும்பத்தினருக்கு போன் செய்து 2 லட்சம் பணத்தைக் கொடுத்தால் தான் மகனை ஊருக்கு அனுப்புவேன் என மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் வீரப்பன் கடந்த சில நாள்களாக ரத்த காயத்துடன் இருப்பதுபோல் உள்ள புகைப்படத்தையும் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகவும் பேசும் ஆடியோ ஒன்றையும் வாட்ஸ் அப் மூலம் குடும்பத்தினருக்கு அனுப்பியுள்ளார்.

அதில், எப்படியாவது என்னைக் காப்பாற்றுங்கள் என அழுதபடி கூறியுள்ளார். மகனின் கதறி அழும் ஆடியோவைக் கேட்ட வீரப்பனின் தாய் இந்திரா தன் உறவினர்களுடன் இன்று தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுப்பதற்காக வந்தார்.

அப்போது, கடந்த 23-ஆம் திகதி என் மகன் போனில் கடைசியாகப் பேசினான். அதன் பிறகு அவனை தொடர்புகொள்ள முடியவில்லை. வெளிநாட்டில் அவன் வேலை செய்யும் இடத்தில் அவனைச் சித்ரவதை செய்து கொடுமைப்படுத்துகின்றனர்.

உடல் முழுக்க காயங்களோடு இருக்கும் படத்தையும் எப்படியாவது என்னைக் காப்பாற்றுங்கள் என அழுதபடி அவன் பேசும் குரலையும் கேட்ட பிறகு கண்கலங்குகிறது.

குடும்ப கஷ்டத்துக்காகக் கடன் வாங்கி அவனை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தேன். ஆனால், அங்கே அவன் மிகவும் கஷ்டப்படுகிறான்.

ஏதும் அசம்பாவிதம் நிகழ்வதற்குள் என் மகனை மீட்டுத் தர வேண்டும் என்று கண்கலங்கிய நிலையில் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers