காப்பகத்தில் தத்து எடுக்கப்பட்ட சிறுவன் இன்று நெதர்லாந்தின் தலைமை பொலிஸ் அதிகாரி: சுவாரஸ்ய சம்பவம்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

இந்தியாவின் மும்பை நகரில் இருந்து தத்து எடுக்கப்பட்ட சிறுவன், இன்று நெதர்லாந்து நாட்டின் பொலிஸ் தலைமை கண்காணிப்பாளராக உயர்ந்துள்ளார்.

கடந்த 1974ஆம் ஆண்டு மும்பையில், ஜாமீல் மியுசென் எனும் 3 வயது சிறுவன் ஆதரவின்றி சுற்றிக் கொண்டிருந்தான். அதனை கவனித்த பொலிசார் அவனை மீட்டு டோங்கிரி காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இரண்டு ஆண்டுகளாக அந்த காப்பகத்தில் இருந்த ஜாமீல், புனித கேத்ரின் காப்பகத்திற்கு மாற்றப்பட்டார். அதன் பின்னர், வெளிநாட்டு தம்பதியர் அச்சிறுவனை தத்தெடுத்து வளர்த்தனர்.

இந்நிலையில், அந்த சிறுவன் தற்போது நெதர்லாந்து நாட்டின் பொலிஸ் தலைமை கண்காணிப்பாளராக உயர்ந்துள்ளார். எனினும், தனக்கு நேரம் கிடைக்கும்போது எல்லாம் தான் இருந்த காப்பகத்திற்கு சென்று வருவதை ஜாமீல் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

கடந்த வாரம் டோங்கிரி காப்பகம் வந்திருந்த ஜாமீல் கூறுகையில், ‘நெதர்லாந்து பெற்றோர் என்னை அவர்களது சொந்த பிள்ளையை போலவே வளர்த்தார்கள். எனக்கான எல்லா வாய்ப்புகளையும், அன்பையும் அவர்கள் தந்தார்கள்.

அவர்கள் எனக்கு கிடைத்தது என் பாக்கியம். டோங்கிரி காப்பகம் தான் என் இல்லம். இதன் அழகான சுற்றுச்சூழல் என்னை மிகவும் கவர்ந்து உள்ளது. இதனால் மீண்டும் மீண்டும் வருகிறேன். இந்த இல்லத்தில் எனக்கு நிறைய நினைவுகள் உள்ளன.

இல்லத்தின் பிரதான நுழைவு வாயில் நெதர்லாந்தில் இருந்தபோது, என் நினைவில் வந்து செல்லும். இங்கு இருந்த கட்டிடம், பள்ளிக்கூடம், மலை மீதுள்ள விவசாய நிலம் என் மனதில் பசுமையான நினைவுகளாக உள்ளன. இந்த இல்லத்தில் உள்ள எனது தம்பி, தங்கைகளுக்கு சிலவற்றை செய்ய வேண்டும் என நான் என் நண்பர்களுடன் வந்துள்ளேன்.

அதில் ஒரு பகுதியாக டோங்கிரி காப்பகத்தில் சமையல் அறை, சாப்பிடும் அறையை கட்டி வருகிறோம். காப்பக குழந்தைகளுக்காக இன்னும் பல பணிகளை செய்ய உள்ளோம். இங்குள்ள குழந்தைகள் என தம்பி, தங்கைகள்.

அவர்களுக்கு என்னால் முடிந்ததை செய்ய வேண்டியது எனது கடமை. காப்பக குழந்தைகளுக்கு உதவி செய்வதற்காக பல முக்கிய நபர்களை சந்தித்து உள்ளேன். எனக்கு படிக்க வாய்ப்பு கிடைத்தது. எனினும் கடினமாக உழைத்த பிறகே இந்த இடத்தை அடைந்து உள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...