சிரியாவில் நடப்பது என்ன? ஒரு ஷாக் ரிப்போர்ட்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

சிரியாவில் பஷர் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த ஐந்து ஆண்டுகளாகச் சண்டை நடைபெற்று வருகிறது.

சிரிய அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் கிளர்ச்சியாளர்கள் வசிக்கும் இடங்களை தேடித் தேடி தாக்குதல் நடத்தி வருவதால், இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது அப்பாவி பொதுமக்கள் தான்.

சிரியா மக்கள் தொகை

வரலாற்றில் ஷாம் என்று அழைக்கப்பட்ட சிரியா, மத்திய கிழக்கில் அமைந்திருக்கும் எண்ணெய் வளமிக்க நாடாகும். இதன் காரணமாகவே உலக நாடுகளின் பார்வை சிரியா மீது உள்ளது. சிரிய மக்கள் தொகையில் 74 சதவீத மக்கள் அரபு மொழி பேசும் சன்னி முஸ்லீம்கள், 16% பேர் ஷியா, குர்து போன்ற பிரிவு முஸ்லீம்கள், 10% சதவீத கிறிஸ்தவர்களும் வசிக்கின்றனர்.

சிரியா போருக்கான காரணம்

சிரியாவினுடைய தற்போதைய அதிபர் பஷார் அல் ஆசாத் ஷியா பிரிவைச் சேர்ந்தவர். கடந்த 2000ம் ஆண்டிலிருந்து இவர் அதிபராக இருக்கிறார். சிறுபாண்மை பிரிவை சேர்ந்த இவருக்கு எதிராக கடந்த 2010 ஆண்டு வெடித்த மக்கள் புரட்சி உள்நாட்டுக் கலவரமாக நீடித்து வருகிறது.

அதுமட்டுமல்லாமல், பஷர் அல் ஆசாத்தால் தொடங்கப்பட்ட ‘சிரியன் எலெக்ட்ரானிக் ஆர்மி’யும் கிளர்ச்சியாளர்களையும், பிற நாட்டவர்களையும் கோபம் கொள்ளவைத்தது. இந்த ஆர்மியின் முக்கிய நோக்கம் துப்பாக்கி ஏந்திப் போராடுவது அல்ல, சைபர் அட்டாக்.

எதிரிகளின் வலைப்பக்கங்களை ஹேக் செய்து தனக்குத் தேவையான தகவல்களை எடுப்பதாகும். இதுவும் உள்நாட்டு யுத்தம் ஆரம்பித்ததற்கு மற்றொரு முக்கியக் காரணமாக அமைந்தது.

ஐஎஸ் அமைப்பும், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவும் தலையீடும்

அப்பாவி மக்களை தாக்குவதாகக் குற்றம்சாட்டி சிரியா மீது தாக்குதலை தொடங்கியது அமெரிக்கா. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆஷாத்துக்கு ஆதரவாக களமிறங்கியது ரஷ்யா.

புரட்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆயுதம் தந்து உதவ, சிரிய அரசுக்கு ரஷ்யா ஆயுதம் தந்தது. இரு வல்லரசுகளுக்கு இடையிலான ஆயுத விற்பனை போட்டிக்கும், வல்லாதிக்கப் போட்டிக்கும் சிரியா இரையானது.

சன்னி முஸ்லீம்களுக்கான அமைப்பு என தன்னைச் சொல்லிக்கொள்ளும் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் இந்த உள்நாட்டு குழப்பத்தைப் பயன்படுத்தி சிரியாவுக்குள் நுழைந்தது. அந்த அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் பல நகரங்கள் வந்தன.

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு எதிராக, பல தீவிரவாத அமைப்புகளும் சிரியாவில் தலைதூக்க ஆரம்பித்தன. உள்நாட்டு யுத்தம் ஒருபக்கம் என்றால், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல்கள் மற்றும் போட்டி தீவிரவாத தாக்குதல்கள் மறுபக்கம். இது சிரியாவுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியது.

மக்கள் மீது ரசாயன தாக்குதல்

கிளர்ச்சியாளர்கள் பகுதியான கிழக்கு கவுடாவில் சிரியா அரசு ரசாயன தாக்குதலை நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியான கவுடாவில் சிரிய - ரஷ்ய கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றன.

இதில் இதுவரை, 500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அவர்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள்.

இந்த நிலையில் சிரிய அரசு வான்வழி தாக்குதலில் குளோரின் வாயுவை பயப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பலருக்கு சுவாச குறைப்பாடு ஏற்பட்டுள்ளது என அக்குழந்தைகளை சோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

யுத்தத்தால் பலியானோர் விவரம்

கடந்த 2011, 2012, 2013 ஆகிய மூன்று ஆண்டுகளில் மட்டும் ராணுவத்தினர் 52 ஆயிரத்துக்கும் அதிகமானோரும், கிளர்ச்சியாளர்கள் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், பொதுமக்கள் தரப்பில் 46 ஆயிரத்துக்கும் அதிகமானோரும் கொல்லப்பட்டு உள்ளனர்.

சண்டை உச்சநிலையில் இருந்த 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில், 42 ஆயிரத்துக்கும் அதிகமான ராணுவத்தினரும், 56 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களும், 31 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி மக்களும் இறந்துள்ளனர்.

2016-ம் ஆண்டின் கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும் சுமார் 40,000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் அனைத்துத் தரப்பினர்களையும் சேர்த்து மூன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். சுமார் 70 லட்சம் மக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்துவருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers