எங்களிடமும் ஆதாரம் உள்ளது: சிரிய தாக்குதல் குறித்து ரஷ்யா

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

சிரியாவில் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுவது ஒரு குறிப்பிட்ட நாடு திட்டமிட்டு நடத்தும் நாடகம் என்பதற்கான மறுக்க முடியாத ஆதாரம் தங்களிடம் இருப்பதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் இடத்திற்கு ரஷ்ய நிபுணர்கள் சென்று ஆய்வு மேற்கொண்டதாகவும் ரசாயன ஆயுதங்கள் எதுவும் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சரான செர்கே லாரோவ் பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றில் தெரிவித்தார்.

ஆனால் நாடகம் நடத்துவதாக அவர் குறிப்பிடும் நாடு எது என்று அவர் தெரிவிக்கவில்லை.

டூமா பகுதியில் சிரியா ரசாயன வாயு ஒன்றைப் பயன்படுத்தி தாக்கியதில் 70 பேர் இறந்ததாக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் குற்றம் சாட்டியதையடுத்து ரஷ்ய அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யாவும் ஈரானும் சிரிய அதிபருக்கு உதவுவதாக குற்றம் சாட்டியதோடு சிரிய தாக்குதலுக்கு பதிலடியாக ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று எச்சரித்தார்.

பிரித்தானிய பிரதமர் தெரசா மேயும், சிரிய அதிபரான பஷார் அல் அசாதின் அரசாங்கம் தான் தாக்குதல்களுக்கு காரணம் என்று தோன்றுகிறது என்று கூறியிருந்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளரான அன்டோனியோ குட்டரஷும் ஒரு முழுமையான விசாரணைக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானும் சிரியாவில் ரசாயன தாக்குதல் நடந்ததற்கு தம்மிடம் ஆதாரம் இருப்பதாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்