தினமும் ஆபத்தை எதிர்கொள்ளும் வீரப்பெண்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்
151Shares

ஜப்பானில் பெண்ணொருவர் அணு உலை விபத்தால் பாதிக்கப்பட்ட இடத்தில், மாடுகளை கவனிக்கும் பொறுப்பை ஏற்று பணியாற்றி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானின் ஃபுகுஷிமா எனும் இடத்தில், கடந்த 2011ஆம் ஆண்டு அணு உலை விபத்து நிகழ்ந்தது. மேலும், இந்த பகுதியில் சுனாமியும் ஏற்பட்டதால் சுமார் 20 ஆயிரம் பேர் இறந்தனர்.

இதனால் பாதுகாப்பு கருதி 1,60,000 பேர் இங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அதன் பின்னர் இந்த இடம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், மனிதர்களால் வளர்க்கப்பட்ட கால்நடைகள் மட்டும் இங்கேயே விடப்பட்டன. உடலில் கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்ட சுமார் 3,500 மாடுகளில் பல இறந்து போயின.

மீதமிருந்த மாடுகளில் 1,500 மாடுகளை, அரசாங்கமே அதன் உரிமையாளர்களின் அனுமதியுடன் கொன்றுவிட்டது. எனினும், சிலர் மட்டும் தங்களது மாடுகளை கொல்வதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.

அதனைத் தொடர்ந்து, அவர்களிடமிருந்து ஆண்டுக்கு 1.3 லட்சம் பெற்று, மாடுகளை பராமரிக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது இவ்வாறு மீதமுள்ள 11 மாடுகளை டானி சகியுகி என்ற பெண் பராமரித்து வருகிறார்.

ஆபத்து நிறைந்த இந்த பகுதியில் தாமாக முன் வந்து இந்த பணியை ஏற்றுக் கொண்ட சகியுகி, இரவு நேரத்தில் வேலைக்குச் சென்றுவிட்டு, பகலில் மாடுகளை பராமரிக்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘விபத்து நடந்த போது நான் டோக்கியோவில் இருந்தேன். செய்தித்தாள்களில் மாடுகள் ஆதரவு இன்றி இருப்பதைப் பற்றிப் படித்தேன்.

உடனே மாடுகளைக் காப்பாற்ற முடிவெடுத்தேன். அரசாங்கம் இது ஆபத்தான பகுதி என்று எச்சரித்தது. நான் உதவி செய்யாவிட்டால், வேறு யார் செய்யப் போகிறார்கள்? அதனால் துணிச்சலுடன் இந்த முடிவை மேற்கொண்டேன்.

ஆரம்பத்தில் இரண்டு நாட்களுக்கு ஓருமுறை சென்று உணவு, தண்ணீர் கொடுத்து வந்தேன். விரைவிலேயே தண்ணீர், உணவு பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால் தினமும் வரவேண்டிய சுழல் ஏற்பட்டது.

மாடுகள் வசிக்கும் பகுதிக்குச் சற்றுத் தொலைவில் இருந்து தண்ணீர் கொண்டு வருகிறேன். ஒவ்வொரு மாடும் தினமும் ஏராளமான லிட்டர் தண்ணீர் குடிப்பதால், நான் பலமுறை தண்ணீர் எடுத்து வர வேண்டியிருக்கிறது.

உணவுகளையும் வெளியில் இருந்து கொண்டு வருகிறேன். 4 மணி நேரங்களுக்கு மேல் இங்கே இருந்தால் ஆபத்து என்பதால், அதற்குள் வேலைகளை முடித்துவிடும்படி கூறியுள்ளனர்.

இல்லாவிட்டால் இந்த மாடுகளுடன் இன்னும் கொஞ்ச நேரம் என்னால் செலவிட முடியும். ஃபுகுஷிமா அணு உலையிலிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த இடம் இருப்பதால், இது அதிக ஆபத்தான பகுதியாக இருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்