வித்தியாசமான உலக திருவிழாக்கள் பற்றி தெரியுமா?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

உலகெங்கும் பல்வேறு வேடிக்கை, கொண்டாட்ட திருவிழாக்கள் நடக்கின்றன. உலகப் பிரபலமான சில வித்தியாசமான திருவிழாக்களும் அடிக்கடி நடந்துவருகிறது.

சின்சில்லா திருவிழா:

சின்சில்லா மெலன் என்ற பெயரில் அவுஸ்திரேலியா நாட்டில் தர்பூசணிகளை மையப்படுத்தி வேடிக்கையான திருவிழாவை நடத்துகிறார்கள். இதற்காக தர்பூசணி பழங்களைச் சாலைகளில் குவித்து வைக்கிறார்கள். பிறகு தர்பூசணிகளின் மீது ஏறி குதித்தும், சறுக்கியும் விளையாடுகிறார்கள்.

சின்சில்லா என்பது அவுஸ்திரேலியாவின் ‘மெலன் கேப்பிட்டல்’ என்று சொல்லப்படும் நகரம். இங்குதான் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பிப்ரவரி மாதத்தில் சின்சில்லா மெலன் திருவிழா கேளிக்கை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படுகிறது.

வருகிற 2019- ஆண்டில் பிப்ரவரி மாதம் 14-ம் திகதி முதல் 17-ம் திகதி வரை, சின்சில்லா மெலன் திருவிழா கொண்டாடப்பட இருக்கிறது.

ஆரஞ்சு திருவிழா:

உலக பிரபலமான திருவிழாக்களில் ஒன்றான இத்தாலி நாட்டின் ஐவ்ரியா நகரில் நடைபெறும் ஆரஞ்சு திருவிழா, பார்ப்பதற்கே மிகவும் கலர்ஃபுல்லாக இருக்கும்.

இந்தத் திருவிழாவில் ஒன்று கூடும் ஆயிரக்கணக்கானோர், ஒருவர் மீது ஒருவர் ஆரஞ்சுப் பழங்களை வீசியெறிந்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்வார்கள்.

12-ம் நூற்றாண்டில் ஐவ்ரியா நகரில் பொதுமக்களுக்கு பெரும் தீங்கு இழைத்த தனவந்தரின் தலையைத் துண்டித்த சிறுமியின் வீரத்தைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் ஆரஞ்சுத் திருவிழாவை கொண்டாடுகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் இந்தத் திருவிழாவுக்காக 50 டன் ஆரஞ்சு பழங்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

இரண்டாம் உலகப் போருக்கு முன்பு வரை, ஆரஞ்சுப் பழங்களுடன் மலர்களையும் சேர்த்து வீட்டு மாடியில் இருந்து, வீதியில் பேரணியாகச் செல்லும் இளைஞர்கள் மீது இளம் பெண்கள் வீசுவது வழக்கமாக இருந்திருக்கிறது.

ஆனால், 2-ம் உலகப் போருக்குப் பின்னர் இந்த ஆரஞ்சுத் திருவிழா, தற்போதைய மாற்றத்தைப் பெற்றிருக்கிறது.

தக்காளி திருவிழா:

தக்காளி திருவிழா என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஸ்பெயின் நாடுதான். ஒவ்வொரு வருடமும், ஆகஸ்ட் மாதத்தின் கடைசி புதன்கிழமையில், ஸ்பெயின் நாட்டிலுள்ள பியுனோல் நகரத்தில் இந்த தக்காளி திருவிழா நடைபெறும். இந்தத் திருவிழாவில், டன் கணக்கில் தக்காளியை ஒருவர் மீது ஒருவர் அடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.

1945 ஆம் ஆண்டு தொடங்கிய இந்தத் தக்காளி திருவிழா பியுனோல் நகரில் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திருவிழாவில் சேதப்படுத்தப்படும் பழுத்த தக்காளிகளின் அளவு சுமார் 100 டன். ஒவ்வொரு வருடமும் இந்தத் தக்காளி திருவிழாவிற்கு , முன்பதிவுகள் செய்யப்படுகிறது.

முன்பதிவு ஆரம்பித்த ஒரு சில வாரங்களிலேயே டிக்கெட்கள் தீர்ந்து விடுகிறது. 1945ஆம் ஆண்டில் தக்காளி விளைந்திருந்த பகுதிகளில் வாழ்ந்துவந்த உள்ளூர்க் குழந்தைகள், உணவுக்காகத் தக்காளியை வீசியெறிந்து சண்டையிட்டுக் கொண்டதைக் கண்டே இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. ஆக விளையாட்டில் ஆரம்பித்தது, விழாவாகி இருக்கிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்