வடகொரியாவால் பதற்றம்: இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் போர் ஒத்திகையில் ஜப்பான்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

வடகொரியாவால் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக ஜப்பானில் போர் ஒத்திகை நடைபெற்றுள்ளது.

வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு, கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

தொடர் சோதனைகள் காரணமாக வடகொரியா பல்வேறு பொருளாதார தடைகளுக்கு உள்ளாகியுள்ளது. இருந்த போதிலும் வடகொரியா பிடிவாதமாக உள்ளது.

வடகொரியாவின் பிடிவாதத்தால், அமெரிக்கா, தென் கொரியா போன்ற நாடுகள் அந்நாட்டின் மீது கடும் கோபத்தில் உள்ளன.

இதனால் வடகொரியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது, இந்த இரு நாடுகளின் மோதல் போக்கு காரணமாக கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலை உள்ளது.

இந்நிலையில் வட கொரியாவின் அணு ஆயுத மற்றும் ஏவுகணைப் பரிசோதனைகளால் நிலவி வரும் பதற்றச் சூழலில், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் திங்கள்கிழமை போர் ஒத்திகை நடைபெற்றுள்ளது.

போர்த் தாக்குதலுக்கு உள்ளாகக் கூடிய சூழலில், பொதுமக்களை பத்திரமான இடங்களுக்கு அப்புறப்படுத்துவதற்கான ஒத்திகையில் அதிகாரிகளும், 250 உள்ளூர் பொதுமக்களும் பங்கேற்றனர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, தலைநகர் டோக்கியோவில் மேற்கொள்ளப்படும் முதல் போர் ஒத்திகை இது எனவும் வட கொரிய ஏவுகணைத் தாக்குதலை மனதில் கொண்டே, இந்தப் போர் ஒத்திகை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் வடகொரியா மற்றும் தென் கொரியா நாடுகளுக்கிடையே பேச்சு வார்த்தை நடந்ததால், கொரிய தீபகற்பத்தில் பதற்றம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வடகொரியா ஜனாதிபதி திடீரென்று தென் கொரியாவுடன் மீண்டும் நடக்கவிருந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்தார்.

இதற்கான காரணம் என்ன என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை என்பதால், கொரிய தீபகற்ப பகுதியில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.


மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...