அகதிகள் பத்து பேர் பனிப்புயலில் சிக்கி பலி

Report Print Harishan in ஏனைய நாடுகள்

சிரியா உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டு லெபனானுக்கு தப்பிச் செல்ல முயன்ற 10 நபர்கள் பனிப்புயலில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவில் உள்நாட்டுப் போர் தீவிரமாக நடைபெற்று வருவதால் குடிமக்கள் பலர் அண்டை நாடான லெபனானுக்கு அகதிகளாக தப்பித்துச் செல்கின்றனர்.

அந்த வாரிசையில் தப்பித்துச் செல்ல திட்டம் தீட்டிய ஒரு குழுவினர், சிரியா- லெபனான் எல்லையில் உள்ள பனிமலை வழியாக லெபனானுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி, நேற்று(19/1/2018) காலை சிரியாவில் இருந்து கிளம்பிய அந்த குழுவினர் பனிமலையை கடக்க முயன்ற போது கடும் பனிப்புயலில் சிக்கியுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த லெபனான் ராணுவத்தினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று புயலில் சிக்கிய நபர்களை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

ஆனால் 9 பேரின் சடலம் தான் கிடைத்துள்ளது. உயிருக்கு போராடிய நிலையில் இருந்த 6 நபர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதிலும் சிகிச்சை பலனலிக்காமல் ஒரு நபர் உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து லெபனான் ராணுவத்தினர் கூறுகையில், பனிப்புயலின்போது கடுங்குளிரைத் தாங்க முடியாமல் 2 குழந்தைகள், 6 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என மொத்தம் 10 நபர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் அகதிகளை கடத்த முயன்றதாக சிரியாவைச் சேர்ந்த 2 நபர்களை கைது செய்துள்ளதாகவும் லெபனான் ராணுவம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்