அதிகரிக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சமீபகாலமாக பாகிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள பிரபல சிந்தனை களஞ்சியம் அமைப்பான ’அமைதி பாடத்துக்கான பாகிஸ்தான் பயிலகம்’ என்னும் அமைப்பு அந்நாட்டில் சமீபகாலமாக நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் பாகிஸ்தான் எதிர்நோக்கியுள்ள பாதுகாப்பு சவால்கள் தொடர்பான ஆய்வு அறிக்கையை நேற்று சமர்ப்பித்துள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டில் உள்நாட்டில் நடைபெற்ற பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-தாலிபான், ஜமாத்துல் அஹ்ரார் உள்ளிட்ட அமைப்புகள் 58 சதவீதம் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

37 சதவீதம் தாக்குதல்கள் தேசியவாத அமைப்பினராலும், 5 சதவீதம் தாக்குதல்கள் பிரிவினைவாதம் தொடர்பான வன்முறை சம்பவங்களால் நிகழ்ந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டில் நாடு முழுவதும் நடைபெற்ற 370 தீவிரவாத தாக்குதல்களில் 815 பேர் உயிரிழந்துள்ளனர். 1,736 பேர் காயமடைந்தனர்.

குறிப்பாக, பலூசிஸ்தான் பகுதியில் நடைபெற்ற தீவிரவாதம் தொடர்புடைய தாக்குதல்களில் 288 பேரும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் 253 பேரும் பலியாகியுள்ளனர்.

எனினும், கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தாக்குதல்களைவிட 2017-ல் நடைபெற்ற தாக்குதல்கள்16 சதவீதம் குறைந்துள்ளது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாகிஸ்தானை ஒட்டியுள்ள ஆப்கானிஸ்தான், ஈரான், இந்தியா எல்லைப்பகுதிகளில் 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளுக்கிடையில் எல்லை தாண்டிய தாக்குதல்கள் 131 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. இவ்வகையிலான 171 தாக்குதல்களில் 188 பேர் உயிரிழந்துள்ளனர்.

பலூசிஸ்தான் மற்றும் சிந்து மாகாணத்தின் வடக்கு பகுதியில் சமீபகாலமாக ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.

இப்பகுதிகளில் கடந்த ஆண்டு ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய 6 ஆவேச தாக்குதல்களில் 153 பேர் கொல்லப்பட்டனர் என்றும் தெரியவந்துள்ளது.

எங்கள் நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகள் யாருமில்லை என்று கூறிவரும் பாகிஸ்தான் அரசின் பொய்முகத்தை தோலுரிக்கும் வகையில் சமீபகாலமாக அங்கு ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாக வெளியாகியுள்ள இந்த ஆய்வறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்