உலக நாடுகளின் கடும் எதிர்ப்புகளுக்கு நடுவில் சீனா வடகொரியாவுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்துவரும் சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 3 மாதங்களில் மட்டும் சீனாவின் எண்ணெய் கப்பல்கள் 30 முறை வடகொரியாவுக்கு எண்ணெய் வழங்கி வந்துள்ளதன் ஆதாரங்கள் வெளியாகியுள்ளது.
வடகொரியாவுடன் கப்பல் மூலம் எந்த வணிகமும் மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் மன்றம் தடை விதித்துள்ள நிலையில் மிகவும் ரகசியமாக இந்த நடவடிக்கைகள் நடைபெற்று வந்துள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து அணுஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வரும் வடகொரியாவுக்கு எதிராக ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா ஆகிய நாடுகள் தொடர்ந்து கண்டன குரல்களை எழுப்பி வருகின்றன.
மேலும் வடகொரியாவின் நடவடிக்கைக்கு தடுக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எனினும் எதிர்ப்புகளை மீறி வடகொரியா தொடர்ந்து அணுஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது.
வடகொரியாவின் அணுஆயுத அச்சுறுத்தல்களை தவிர்க்க சீனா உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது ஆசிய சுற்றுப்பயணத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சீனா வடகொரியாவுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் சீனா இதனை மறுத்தது.
இந்த விவகாரம் தொடர்பாக தமது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், "சீனாவும், வடகொரியாவும் கையும், களவுமாக பிடிப்பட்டுக் கொண்டன.
வடகொரியாவுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் சீனாவின் நடவடிக்கை ஏமாற்றமளிக்கிறது.
இது தொடர்ந்து நடந்து கொண்டிருந்தால் வடகொரியா விவகாரத்தில் நட்பின் அடிப்படையில் முடிவு எட்டப்படாது என்று பதிவிட்டுள்ளார்.
இதனிடையே சீனாவின் குறித்த செயல் தென் கொரியாவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியாவுடனான உறவை சீனா முறித்துக் கொள்ள தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது தென் கொரியா.