வடகொரியாவால் மறக்க முடியாத நான்கு அமெரிக்க வீரர்கள்

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

வட கொரியாவில் திரைப்படங்களில் அமெரிக்க நட்சத்திரங்கள் சிலர் பிரபலமானவர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

அமெரிக்க திரைப்பட நடிகர்களையோ, ஹாலிவுட் நட்சத்திரங்களைப் பற்றியோ பேசவில்லை. திரைத்துறைக்கு தொடர்பில்லாத இந்த அமெரிக்கர்கள், வடகொரிய திரைப்படங்களில் மட்டுமே நடித்து திரைப்பட நட்சத்திரங்களாக மிகவும் பிரபலமடைந்தார்கள்.

தற்போது அமெரிக்காவிற்கும் வட கொரியாவிற்கும் இடையில் பதற்றங்கள் அதிகரித்திருக்கிறது. ஒன்று மற்றொன்றைவிட அதிகாரம் மிக்கது என்று காட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் நூற்றுக்கு நூறு சதவிகிதம் உண்மையான இந்த தகவல்கள் உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.

உலகிலேயே மிகவும் ஆபத்தான இடம் 38 வது அட்சரேகை (38th parallel line)

வட கொரியா மற்றும் தென்கொரியாவின் எல்லைப்பகுதி 38வது அட்சரேகை என்று அழைக்கப்படுகிறது. இந்த எல்லையானது 1950களில் கொரியாவில் நடைபெற்ற உள்நாட்டு சண்டையின்போது, நாடு இரண்டாக பிரிந்தபோது நிர்ணயிக்கப்பட்டது.

கொரியா முழுவதையும் தங்கள் வசப்படுத்தும் முயற்சியில், அமெரிக்காவின் ஆதரவு பெற்ற தென் கொரியாவும், ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதரவு பெற்ற வட கொரியாவும் கடுமையாக சண்டையிட்டன. யுத்தத்தின் முடிவில் கொரிய தீபகற்பம் துண்டாடப்பட்டு வட கொரியா தென் கொரியா என இரண்டாக பிரிந்தன.

இந்த எல்லையை கடப்பது உயிருக்கு உலை வைக்கக்கூடியது. எல்லையை கடக்க முயற்சிப்பவர்களை எதிரிப்படைகள் பார்த்து சுடுவதற்கு முன்னரே, கண்ணுக்கு தெரியாத கண்ணி வெடிக்கு பலியாவதற்கான சாத்தியங்களே அதிகம்.

உலகிலேயே மிகவும் ஆபத்தான பகுதி என்று அறியப்படும் பகுதி 38வது அட்சரேகை எல்லைப் பகுதி என்றால் அது மிகையாகாது. ஆனால் உலகில் துணிச்சல் மிக்கவர்கள் மற்றும் அபாயத்தை எதிர்கொள்பவர்களுக்கும் பஞ்சமில்லை.

அப்படிப்பட்டவர்களில் சில அமெரிக்கர்களின் பெயர்களும் வருகின்றன. இவர்கள் எல்லையை கடந்து வட கொரியாவிற்குள் நுழைந்துவிட்டார்கள். இந்த எல்லைப்பகுதியில் தென் கொரியாவிற்கு உதவுவதற்காக அறுபதுகளில் அமெரிக்கத் துருப்புக்கள் இங்கு வந்தன.

அமெரிக்காவின் வட கரோலினாவைச் சேர்ந்த சார்லஸ் ராபர்ட் ஜென்கின்ஸ் அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிந்தவர். இவர் 1965 ஜனவரி மாதத்தில் தென் கொரியாவில் இருந்த அமெரிக்க துருப்புக்களை விட்டுவிட்டு வடகொரியாவிற்குள் ஓடிவிட்டார்.

அவர் அந்த மரண ஆபத்து கொண்ட சாகசத்தை செய்தபோது அவரிடம் இருந்தது ஒரேயொரு துப்பாக்கி மட்டுமே. ரோந்துப் படையில் இருந்த அவர் வட கொரியா எல்லையை நோக்கி நகர்ந்தார்.

சரி, ஜென்கின்ஸின் இந்த முடிவுக்கு காரணம் என்ன? வியட்னாமிற்கு அமெரிக்க படைகள் அனுப்பப்படும்போது, அதில் தானும் செல்ல நேரிடுமோ என்று அஞ்சிய அவர், அதிலிருந்து தப்பிக்க வட கொரியாவிற்குள் நுழைந்துவிட்டார். அவரது அந்த முடிவு வாழ்க்கையையே புரட்டிப்போட்டது.

வடகொரிய எல்லைக்குள் சென்ற ஜெக்கின்ஸ் கைது செய்யப்பட்டார். பிறகு அடுத்த 39 ஆண்டுகள் போர்கைதியாகவே இருந்தார். 1962இல் இருந்து இப்படி மூன்று அமெரிக்க சிப்பாய்கள் வட கொரியாவிற்குள் சென்றுவிட்டார்கள். இவர்கள் நால்வரும் ஒன்றாகவே தங்க வைக்கப்பட்டார்கள்.

தீவிரமான கண்காணிப்பில் ஒரே அறையில் வைக்கப்பட்டிருந்த நால்வரும் அங்கு உயிருக்கு அச்சுறுத்தலான நிலைமையிலேயே வாழ்ந்தார்கள் என்றாலும், அவர்களது வாழ்க்கையில் சுவாரஸ்யமான திருப்பங்களும் நிகழ்ந்தன.

இவர்கள் நால்வரும் சிறையில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டார்கள். அரசு பொருட்களை திருடிவிடுவார்கள் அல்லது காட்டுக்குள் ஓடிவிடுவார்கள். அவர்கள் செய்தது விவேகமற்ற குறும்புச் செயல்களாக இருந்தாலும் அது அவர்களின் உயிரை எடுக்கக்கூடிய தன்மை கொண்டவை.

'The Reluctant Communist', என்ற தனது சுயசரிதையை 2009ஆம் ஆண்டு ராபர்ட் ஜென்கின்ஸ் எழுதினார். அறுபதுகளில், வட கொரியாவை ஆட்சி செய்தவர் இடதுசாரி சர்வாதிகாரி கிம் இல் சுங். அவரது மகன் கிம் ஜோங் இல் திரைப்பட ரசிகர். திரைப்படங்கள் மூலம் வட கொரியாவின் கொள்கைகளை ஊக்குவிக்க ஆட்சியாளர்கள் முடிவு செய்தனர்

1962இல் வடகொரியாவில் தஞ்சம் அடைந்த அமெரிக்க சிப்பாய் ஜேம்ஸ் டெஸ்நோக் முதல் திரைப்படத்தில் வில்லனாக நடித்தார். திரைப்பட இயக்குநர்களை மற்றொரு நாட்டிற்கு அனுப்பிய இல், திரைப்படம் தயாரிக்கும் கலையை கற்றுக்கொள்ளச் செய்தார்.

1972 ஆம் ஆண்டில் புகழ்பெற்ற வட கொரிய திரைப்படமான 'தி ஃப்ளவர் கேர்ள்' வெளியிடப்பட்டது. நிலச் சுவான்தாரர்களுக்கு எதிரான ஒரு வட கொரிய பெண்ணின் போராட்டத்தை பற்றிய கதையைக் கொண்ட திரைப்படம் அது.

இந்தத் திரைப்படத்தின் கதாநாயகி ஹாங் யங்-ஹுய் மிகவும் பிரபலமானார். வட கொரியாவில் 2009ஆம் ஆண்டுவரை பண நோட்டுகளில் அவரது புகைப்படங்கள் அச்சிடப்பட்டன. தனது திரைப்படத்தின் பெயரால் ஹாங் மக்களால் அறியப்பட்டார்.

1978 வட கொரியா 'Unsung Heroes' என்ற பெயரில் இருபது திரைப்படங்கள் கொண்ட தொடரை தொடங்கியது. இதில் கெல்டன் என்ற மருத்துவரின் ராபர்ட் ஜென்கின்ஸ் வில்லனாக நடித்தார்.

அமெரிக்க ஆயுதம் தயாரிப்பாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் வட கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போர் தொடரவேண்டும் என்பதே அந்த கதாபாத்திரத்தின் குறிக்கோளாக காட்டப்பட்டது.

இந்த தொடரில், அமெரிக்க ராணுவ தளபதி ஜேம்ஸ் டெஸ்நோக், போர் கைதிகள் முகாமின் தலைவர் ஆர்தர் என்ற அடக்குமுறையாளர் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கப்பட்டார்.

மற்றொரு அமெரிக்க சிப்பாய் ரலி எப்ஷியரும் நடித்தார். பைரிஷ் என்ற மற்றொரு சிப்பாய் வடக்கு அயர்லாந்தின் ராணுவ வீரர் லூயிசாக நடித்தார்.

கைதிகளிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய மக்கள்

பைரிஷின் கதாபாத்திரம் வட கொரிய மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. ஏனெனில் அவருடைய கதாபாத்திரத்திற்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் குடிமக்களை பிடிக்காது. வடகொரிய தலைநகர் பியோங்யாங்கில் அவருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்படும். அவரை மக்கள் கம்யூனிஸ்ட் கதாநாயகராகவே பார்த்தார்கள்.

தப்பியோடிய இந்த நான்கு சிப்பாய்களும் பெரிய அளவில் கல்வி கற்றதில்லை. திரைப்படங்களில் நடிக்கவேண்டும் என்ற ஆசையோ லட்சியமோ கொண்டவர்களும் இல்லை. ஆனால் இவர்கள் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார்கள்.

இவர்கள் போர் கைதிகள் என்பதும் வட கொரிய மக்களுக்கு தெரியும். இருந்தாலும் பொது இடங்களுக்கு இவர்கள் வந்தால், ஆட்டோகிராஃப் வாங்க மக்கள் ஆசைப்படுவார்கள் என்று ஜென்கின்ஸ் தனது சுயசரிதையில் குறிப்பிடுகிறார்.

39 ஆண்டுகள் வடகொரியாவில் போர்கைதியாக இருந்த ஜென்கின்ஸ் 2000வது ஆண்டில் 'ப்யூப்லோ' என்ற திரைப்படத்தில் கடைசியாக நடித்தார். இந்த திரைப்படம் 1968ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.

ப்யூப்லோ என்ற அமெரிக்க கப்பலைத் தாக்கிய வட கொரியா, அதனை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. பிறகு இந்த கப்பல் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது.

ஜென்கின்ஸைப் போன்றே ஜேம்ஸ் டெஸ்நோக்கும் பல படங்களில் நடித்தார். இவர் ஜென்கின்ஸ்விட பிரபலமானவர். ஒரு ராணுவப்பிரிவு பன்னிரண்டு மணி நேரத்திற்குள் அமெரிக்க படையெடுப்பைத் முறியடிக்க வேண்டியதை சித்தரித்த 'From 5 PM to 5 AM' என்ற திரைப்படத்தில் டெஸ்நோக் அமெரிக்க தளபதி வேடத்தில் நடித்திருந்தார்.

கிம் ஜோங் இல்லின் திரைப்பட ஆர்வத்தை தணிக்கவும் இந்த அமெரிக்க போர் கைதிகள் பயன்படுத்தப்பட்டனர். அமெரிக்க திரைப்படங்கள் பார்க்க விரும்பும் கிம் ஜோங் இல்லுக்கு, அதில் வரும் ஆங்கில உரையாடலை புரிந்து கொள்ளமுடியாது.

ஆனால் தனது திரைப்பட ஆர்வத்தை தணித்துக்கொள்ள அமெரிக்க போர் கைதிகளை அவர் பயன்படுத்திக்கொண்டார். போர்க் கைதிகளுக்கு முழு திரைப்படமும் காட்டப்படாமல், திரைப்படத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் காணப்பட்டு உரையாடலை கேட்டுத் தெரிந்துக்கொள்வார் கிம் ஜோங் இல்.

அமெரிக்க சிப்பாய் ஏப்ஷியார் மாரடைப்பினால் தனது 40 வயதிலேயே பியோங்யாங்கில் காலமானார். சிறுநீரகக்கோளாறால் அவதிப்பட்ட பைரிஷ் 1990இல் காலமானார்.

வட கொரியாவில் சிறைக்கைதியாக இருந்த ஜப்பானிய பெண் ஹிட்டோமி சோகா சார்லஸை ஜென்கின்ஸ் மணந்துக்கொண்டார். 2004ஆம் ஆண்டு இருவரும் ஜப்பான் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. வட கொரியாவில் வாழ்ந்த தனது நினைவுகளை 2009 ஆம் ஆண்டில் சுயசரிதையாக ஆவணப்படுத்தினார் ஜென்கின்ஸ்.

ஜென்கின்ஸின் சக கைதியான ஜேம்ஸ் டெஸ்நோக், வட கொரியா பெண் ஒருவரை திருமணம் செய்து அங்கேயே வசித்துவந்தார். வடகொரியா தனக்கு தாயகமாகவே தோன்றுவதாக கூறிய ஜேம்ஸ் டெஸ்நோக், அமெரிக்காவுக்கு திரும்பிச்செல்ல விரும்பிய ஜென்கின்ஸை வெறுத்தார்.

வடகொரிய திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நான்கு அமெரிக்க போர்கைதிகளும் அந்த நாட்டில் என்றேன்றும் மாறாத புகழ்பெற்றுவிட்டார்கள்.

- BBC - Tamil

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்