வடகொரியா-அமெரிக்கா மோதல் முடிவுக்கு வருமா? ஜெப்ரி பெல்ட்மேன் நடத்தவிருக்கும் முக்கிய பேச்சுவார்த்தை

Report Print Santhan in ஏனைய நாடுகள்

தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வரும் வடகொரியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஐ.நா. அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் ஜெப்ரி பெல்ட்மேன் அந்நாட்டிற்கு சென்றுள்ளார்.

வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. வடகொரியாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தும் தனது சோதனைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இப்படி தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டு வரும் வடகொரியா மீது ஐ.நா-வில் பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா கோரியிருந்தது. இதனால் அந்நாட்டின் மீது பொருளாதார தடையும் விதிக்கப்பட்டது.

இருப்பினும் வடகொரியா தன்னுடைய முடிவில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் சமீபத்தில் கூட உலகையே அச்சுறுத்தும் ஏவுகணை சோதனையை மேற்கொண்டது.

இந்த ஏவுகணை அமெரிக்காவின் எந்த பகுதியையும் தங்களால் தாக்கமுடியும் என வடகொரியா அறிவித்தது.

வடகொரியாவின் இந்த அறிவிப்பை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் தென்கொரியா விமானப்படையினர் இணைந்து நேற்று முன்தினம் முதல் கூட்டுப்பயிற்சி நடத்தி வருகின்றனர்.

இந்த கூட்டுப்பயிற்சியில் சுமார் 230 இராணுவ விமானங்கள் பங்கேற்றுள்ளன. இந்த பயிற்சிக்காக அமெரிக்கா விமானப்படை 24 மறைந்து தாக்கும் விமானங்களை அனுப்பியுள்ளது.

இந்த பயிற்சியில் சுமார் 12 ஆயிரம் இராணுவ வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். இது கொரிய தீபகற்பத்தில் மேலும் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தியது.

இப்படி ஒரு சூழ்நிலையில் ஐநா.வின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் ஜெப்ரி பெல்ட்மேன், அமைதி தூதரக வடகொரியாவிற்கு சென்றுள்ளார்.

அங்கு அவர், இருதரப்பு விருப்பங்கள் மற்றும் கவலைகள் குறித்து அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னை அவர் சந்திப்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை எனவும் அங்கிருக்கும் வெளிநாட்டு தூதர்கள், ஐ.நா. ஊழியர்கள் ஆகியோரையும் அவர் சந்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...