தொலைபேசி எண்ணால் நிம்மதி இழந்த ஆட்டோ ஓட்டுநர்: நடிகரின் செயலால் நேர்ந்த அவலம்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

வங்கதேசம் நாட்டினைச் சேர்ந்த நடிகர் ஷாகிப் கான். இவர் தான் நடித்த திரைப்படத்தில் பயன்படுத்திய தொலைபேசி எண், ஆட்டோ ஓட்டுநருடையதாகும். இதனால் தன் வாழ்வில் நிம்மிதியே போய்விட்டது என்று கூறுகிறார் ஆட்டோ ஓட்டுநர் மியா.

’ராஜ்நீதி’ என்னும் திரைப்படத்தில் வங்கதேச நடிகர் ஷாகிப் கான் நடித்திருந்தார். அதில் ஒரு காட்சியில் ஷாகிப் கான் பயன்படுத்துமாறு ஒரு தொலைபேசி எண் காண்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அது ஆட்டோ ஓட்டுநர் மியா என்பவரதாகும். இதனால் தன் வாழ்வே பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் அவர், ஷாகிப் கான் மீது வழக்கு தொடரப்போவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், பொதுவாக திரைப்படங்களில் போலியான தொலைபேசி எண்கள் தான் காண்பிக்கப்படும்.

ஆனால், ஷாகிப் கான் நடித்த படத்தில் உண்மையான என்னுடைய எண் காண்பிக்கப்பட்டுள்ளது. படம் வெளியானது முதல் எனது தொலைபேசிக்கு தினமும் குறைந்தது 500 அழைப்புகளாவது வருகின்றது.

எல்லோரும் ஷாகிப்பின் ரசிகைகள் தான். அவர்களுக்கு என்னால் பதில் கூற முடியவில்லை. அதில் ஒரு ரசிகை என் வீட்டிற்கே வந்துவிட்டதால், என் மனைவி என்னிடம் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டாள்.

என் மீது அவள் சந்தேகப்பட்டு கேட்கும் கேள்விகளுக்கு, நான் கூறும் பதில்களை அவள் நம்ப மறுத்துவிட்டாள். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் செய்தேன், எனக்கு குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் நான் வீட்டை மாற்றும் முடிவில் இருக்கிறேன், இந்த எண்ணை என்னால் மாற்ற முடியாது, எனது பல வாடிக்கையாளர்களுக்கு இந்த எண்ணைத் தான் கொடுத்திருக்கிறேன்.

இதை மாற்றினால் என்னுடைய தொழில் வெகுவாக பாதிக்கப்படும், நான் நிம்மதியை இழந்து தவித்து வருகிறேன். எனவே ஷாகிப் கான், படத் தயாரிப்பாளர், இயக்குனர் மீதி வழக்கு தொடர போகிறேன்.

எனக்கு ஏற்பட்ட துன்பத்திற்கு நஷ்ட ஈடாக 39 லட்சம் கோரவுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

மேலும், அவரின் வழக்கறிஞர் எம்.ஏ.மஜித் கூறுகையில், தனிப்பட்ட ஒருவரின் தொலைபேசி எண்ணை அவரது அனுமதியில்லாமல் பயன்படுத்துவது குற்றமாகும். எனவே, மியாவுக்கு நஷ்ட ஈடு கிடைக்கும் என்றார்.

அடுத்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில், ஷாகிப் கான் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்