அன்னை தெரசாவுக்கு இன்று புனிதர் பட்டம்! நபரின் உருக்கமான பேட்டி

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

அன்னை தெரசாவுக்கு வாடிகனில் அதிகாரப்பூர்வமாக போப் பிரான்சிஸ் இன்று புனிதர் பட்டம் வழங்கினார்.

அல்பேனியாவில் கடந்த 1910-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26-ம் திகதி பிறந்தவர் அன்னை தெரசா.

இவரது இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ. இளம் வயதிலேயே கத்தோலிக்க மதத்தில் துறவறம் மேற்கொண்டு சேவை செய்ய தொடங்கினார்.

இவரை கௌரவிக்கும் வகையில் கடந்த 1979ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

அதேபோல் இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதும் கடந்த 1980-ம் ஆண்டு அன்னை தெரசாவுக்கு வழங்கப்பட்டது.

கடந்த 1997-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி அன்னை தெரசா காலமானார்.

அவரது மறைவுக்கு பிறகு அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்க வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

ஆனால் ஒருவருக்கு புனிதர் பட்டம் வழங்க வேண்டும் என்றால் அவர் இறப்பிற்கு பிறகு இரண்டு அதிசயங்களை நிகழ்த்தி இருக்க வேண்டும்.

அதன்படி, அன்னை தெரசாவை தொடர்ந்து பிரார்த்தனை செய்து வந்ததால், தங்கள் நோய் முற்றிலும் குணமடைந்ததாக 2 பேர் கூறினர்.

அவர்களுடைய தகவல்களை ஆராய்ந்த பின் அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படும் என்று கடந்த மார்ச் மாதம் வாடிகனில் போப் பிரான்சிஸ் அறிவித்தார்.

இதன்படி தெரசா புரிந்த அற்புதங்களை அங்கீகரிக்கும் விதமாக புனிதர் பட்டம் வழங்கும் விழா வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை மதகுருவான போப் ஆண்டவர் பிரான்சிஸ் அன்னை தெரசாவை புனிதர் பட்டம் பெற்றவராக அறிவித்து சிறப்பு செய்தார்.

வாடிகன் நகரில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் இந்த விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து பேராயர்கள் மற்றும் 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டனர். 13 நாடுகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்களும் பங்கேற்றனர்.

அன்னை தெரசாவால் குணமானேன்! நபரின் உருக்கமான பேட்டி

அன்னை தெரசாவால் தான் நான் குணமானேன் என பிரேசில் நாட்டை சேர்ந்த மார்சிலியோ ஆண்ட்ரினோ என்பவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், கடந்த 2006ம் ஆண்டு முதல் எனக்கு கடுமையான தலைவலி இருந்து வந்தது.

2008ம் ஆண்டு ஸ்கேன் செய்து பார்த்த போதுதான் மூளையில் சீழ்க்கட்டிகள் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர், இதற்காக சில மருந்துகளையும் கொடுத்தனர்.

நான் குணமடைய வேண்டும் என என் மனைவியும், உறவினர்களும் அன்னை தெரசாவிடம் வேண்டுதல் செய்து வந்தனர்.

எனக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டிருந்த நாளில், எனது தலைவலி வெகுவாக குறைந்திருந்தது.

நான் இயல்பாக இருந்ததை கவனித்த மருத்துவர்கள், என் மூளையை ஸ்கேன் செய்து பார்த்தனர்.

அப்போது 70 சதவீதம் கட்டிகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது. எனவே அறுவை சிகிச்சையை தள்ளிவைக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

3 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஸ்கேன் செய்து பார்த்தபோது, மூளையில் கட்டிகள் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் முழுமையாக குணம் பெற்றிருந்தேன்.

இதற்காக நான் எடுத்துக் கொண்ட மருந்துகளால் குழந்தை பேறு இருக்காது என மருத்துவர்கள் தெரிவித்தனர், ஆனால் நான் தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தந்தை.

இது அன்னை தெரசாவால் நிகழ்ந்த அற்புதமே என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments