புகலிடம் கோரி சட்டவிரோதமாக பயணித்த படகு ஒன்று ஏஜியன் கடல் பகுதியில் வைத்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் காணாமல் போயுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த படகு கீரிஸ் நாட்டின் லெஸ்போஸ் தீவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில், ஒரு குழந்தை உயிரிழந்துள்ள அதேவேளை, ஆறு பேர் வரை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து தொடர்பில், கருத்து தெரிவித்துள்ள கடலோர பாதுகாப்பு படை அதிகாரி, இதுவரை நான்கு அகதிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர், காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் விரிவு படுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
உள்நாட்டு யுத்தம், சீரற்ற பொருளாதாரம் மற்றும் ஸ்தீரமற்ற அரசியல் கொள்கை போன்ற காரணிகளினால் சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து அதிகளவான மக்கள் புகலிடம் கோரி ஐரோப்பிய நாடுகளை நோக்கி செல்கின்றனர்.
இந்நிலையில், புகலிடம் கோரி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகள் படையெடுக்கும் எண்ணிக்கை அண்மைய நாட்களில் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக, பல ஐரோப்பிய நாடுகள் பாரிய அழுத்தங்களை எதிர்நோக்கியிருந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் துருக்கி ஆகியன உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டது.
குறித்த உடன்படிக்கையின் படி சட்டவிரோதமாக கிரீஸ் தீவுகளுக்கு வரும் புகலிட கோரிக்கையாளர்கள் மீண்டும் துருக்கிக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து அவர்கள் சொந்த நாடுகளுக்கு மீளவும் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இதன் காரணமாக, ஐரோப்பிய நாடுகளுக்கு வரும் புகலிட கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.