மத்திய தரைக்கடல் பகுதியில் விபத்துக்குள்ளான எகிப்து விமானத்தில் இருந்து மீட்கப்பட்ட கருப்பு பெட்டியில் இருந்து தகவல்கள் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 19ம் திகதி 66 பயணிகளுடன் மத்திய தரைக்கடல் பகுதியில் வைத்து எகிப்து விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளதை அடுத்து அதில் பதிவாகியிருக்கும் தகவல்களை திரட்டுவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட கருப்பு பெட்டியை தற்போது பாரிசில் இருக்கும் பிரஞ்சு விமான போக்குவரத்து விபத்து விசாரணை செயலக அதிகாரிகள் அதன் சேதத்தை நிவர்த்தி செய்ய முயற்சித்து வருகின்றனர்.
அதன்பின்னர் கெய்ரோ அதிகாரிகள் விசாரணையை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் கருப்பு பெட்டியானது அமெரிக்க நிறுவனமான Honeywell தயாரித்துள்ளது. விமானத்தை தயாரித்தது பிரான்ஸ் நிறுவனம். இதனால் உரிய நேரத்தில் கருப்பு பெட்டியில் இருந்து தகவல்களை பெறுவதில் விசாரணை அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே விபத்துக்கு முன்னர் அந்த விமானத்தின் விமானி எந்த விதமான துயர செய்தியையும் பதிவு செய்யவில்லை என தெரியவந்துள்ளது.
பொதுவாக இதுபோன்ற விமான விபத்து நேர்ந்த கருப்பு பெட்டியில் இருந்து விசாரணை அதிகாரிகள் போதுமான தகவல்களை சேகரிப்பது வழக்கம்.
இதில் விமானியின் மொத்த உரையாடல்கள், எந்திரத்தின் தகவல்கள் மற்றும் விமானியின் அறையில் நடைபெற்ற முக்கிய தகவல்கள் போன்றவை பதிவாகியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.