இலங்கையின் திருகோணமலையில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ருத்ரதாண்டவமாடி தமிழகத்தின் தூத்துக்குடியில், புயல் ஒன்று கரையை கடந்த நிலையில், அதே பாதையில் தற்போது புரேவி புயல் பயணித்து வருகிறது.
இலங்கை எனும் ஒரு நாட்டின் கரையை கடந்து இந்தியா என்ற மற்றொரு நாட்டின் தமிழ்நாடு மாநிலத்தில் புயல் கரையை கடப்பது என்பது அபூர்வமான நிகழ்வு ஆகும்.
கடந்த 2000-ஆம் ஆண்டு இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமான யுத்தம் உச்சத்தில் இருந்த காலம் அது, விடுதலைப் புலிகளின் கைகள் ஓங்கியிருந்த தருணம்.
ஈழத் தமிழரின் தாயகப் பகுதியான வடக்கும் கிழக்கும் முழுவதுமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.
அப்போது தான் மிகவும் தீவிரமான புயல் உருவாகி திருகோணமலையை கடுமையாக தாக்கியது. இதில் தமிழர்கள் பலர் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்த புயல் அப்படியே இலங்கையை கடந்து தமிழகத்தின் தூத்துக்குடி பகுதியில் கரையை கடந்தது. இருநாடுகளிலும் தமிழர் நிலப்பகுதிகளில் பெரும் சேதத்தை இந்த புயல் ஏற்படுத்தியது.
தற்போது உருவாகியுள்ள புதிய புயலான புரேவி புயலும், கிட்டத்தட்ட 2000-ஆம் ஆண்டு புயலின் பாதையிலேயே பயணித்து கொண்டிருக்கிறது என்பதை முந்தைய செயற்கைகோள் படங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது தெரிகிறது.
இலங்கையின் திருகோணமலையில் 2000-ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் இந்த புயல் தாக்கி சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மீட்பு பணிகளில் இறங்க தொடங்கிய காலம். யுத்த களத்தில் கை ஓங்கி நின்ற விடுதலைப் புலிகள் ஒருதலைபட்சமாகவே போர் நிறுத்தத்தை அறிவித்தனர்.
இதனை இலங்கை அரசு நிராகரித்தது. பின்னர் அடுத்தடுத்த கட்டங்களினூடாக அமைதிக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் முடிவாகத்தான் வரலாற்றுச் சிறப்புமிக்க 2002-ஆம் ஆண்டு இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான யுத்த நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. புயலுக்கு முன் அமைதி என்று கூறுவார்க. அது போன்று தான், இலங்கையில் ஒரு புயலுக்கு பின் அமைதி ஒப்பந்தம் உருவானது.