வங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் திருகோணமலைக்கு 300 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த தகவலை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
இதோடு புரெவி புயல் காரணமாக, தமிழகம் மற்றும் கேரளாவின் தென்மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புரெவி புயல் நேற்றிரவு எட்டரை மணி நிலவரப்படி இலங்கையின் திருகோணமலையில் இருந்து 330 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது திருகோணமலைக்கு 300 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருக்கிறது.
இதையடுத்து இன்று மாலை அல்லது இரவில் திருகோணமலை அடையும் புரெவி, மறுநாள் மன்னார் வளைகுடா வரும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அதே வலுவுடன் கன்னியாகுமரி - பாம்பன் இடையே நான்காம் தேதி கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையை கடக்கும்போது 95 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசும் என்பதால், தெற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புரெவி புயல் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் ஆலப்புழா மாவட்ங்களிலும் அதிகனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்திலும் கேரளாவிலும் தென் மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே புயலை எதிர்கொள்ள தமிழகத்திற்கு 18 தேசியப் பேரிடர் மீட்புக்குழுக்களும், கேரளாவில் 8 குழுக்களுக்கும் அனுப்பப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.