கிளிநொச்சி மாவட்டத்தில் 33000 குடும்பங்கள் பாதிப்பு! மாவட்ட அரச அதிபர் தகவல்

Report Print Yathu in இயற்கை

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி நிலை காரணமாக சுமார் 33000 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமை நாயகம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது கடுமையான வறட்சி நிலை காணப்படுகின்றது. இது தொடர்பில் இன்றைய தினம் மாவட்ட அரச அதிபரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

குறித்த கேள்விக்கு பதிலளித்த அரச அதிபர்,

கிளிநொச்சி மாவட்டத்தில் மிக மோசமான வறட்சி இந்த ஆண்டிலே காணப்படுகின்றது வரலாற்றில் என்றும் இல்லாதவாறு கடுமையான வறட்சி நிலவி வருகின்றது.

கடந்த ஆண்டு கூட போதிய நீர் வசதி இல்லாத போதும் மிகக் குறைந்தளவில் பயிர் செய்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இருந்த போதும் இந்த ஆண்டில் கூடுதலான பயிர்ச் செய்கையினை மேற்கொள்ள முடியும் என்ற ஒரு நம்பிக்கை விவசாயிகளிடம் இருந்தது.

எமது மாவட்டத்தை பொறுத்த வரையில் 65 வீதமான மக்கள் விவசாயத்திலேயே தங்கியுள்ளனர். எனவே இந்த நிலை காரணமாக மிக மோசமான ஒரு பாதிப்பே தற்போது காணப்படுகின்றது.

குடிநீர் தட்டுப்பாடு நிலவுகின்றது, இந்த அடிப்படையில் பிரதேச செயலாளர்கள் ஊடாகவும், பிரதேச செயலகங்கள், பிரதேச சபைகள், தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபை என்பவற்றின் மூலம் சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இங்குள்ள குளங்கள், நீர் நிலைகள் வற்றி வருவதனால் கால் நடைகளின் நீர் தேவை கருதி இரணைமடு மற்றும் ஏனைய குளங்களின் ஊடாக நீர் திறந்து விடப்பட்டுள்ளன.

தற்போது வறட்சியினால் பொதுவாக நன்னீர் மீன் பிடித்தொழிலாளர்கள், விவசாய நடவடிக்கைகளை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் என ஏறத்தாள 33000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்தும் இதனை எதிர் கொள்வதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் எனவும் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமை நாயகம் தெரிவித்துள்ளார்.

yathu bashkaran

மேலும் இயற்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers