உங்கள் ஷாப்பிங் செல­வு­களை கட்­டுப்­ப­டுத்­து­வது எப்­படி?

Report Print Gokulan Gokulan in பணம்

ஷாப்பிங் பழக்கம், ஷாப்பிங் மோகம் பற்றி எல்லாம் பேசப்படுவது குறித்து, நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். பொருட்களை வாங்குவது என்பது, தேவையின் அடிப்படையில் அமையாமல், மிகையான பழக்கமாக மாறும் போது, வீண் செலவுகள் ஏற்பட்டு, பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இத்தகைய மிகை ஷாப்பிங் பழக்கம் இருந்தால், அதை கட்டுப்படுத்துவதற்கான வழிகள் இதோ:

செலவு செய்யும் முன்: வரவுக்குள் செலவுகள் அடங்க வேண்டும் என்பது மட்டும் அல்ல, கையில் இல்லாத பணத்தை செலவு செய்யும் பழக்கமும், தவிர்க்கப்பட வேண்டும். அதாவது எதிர்காலத்தில் வரக்கூடிய பணத்தை மனதில் கொண்டு, செலவு செய்வது கூடாது. அடுத்த சில மாதங்களில் ஊதிய உயர்வு அல்லது போனஸ் வரும் என தெரிந்தால், அதனால் உற்சாகமாகி கூடுதலாக செலவிட தோன்றலாம். முதலில் பணம் கைக்கு வரட்டும் அதன் பின் செலவுகளை திட்டமிடலாம்.

சேமிப்பு எவ்வளவு: தள்ளுபடி சலுகைகளை விரும்பாதவர்கள் யார்... ஆனால் தள்ளுபடியில் என்ன பிரச்னை என்றால், நாம் விலையை ஒப்பிட்டு பார்த்து கிடைக்கும் சலுகையை நினைத்து மகிழ்கிறோமே தவிர, ஒட்டுமொத்த நோக்கில் செலவை கருத்தில் கொள்வதில்லை. 100 ரூபாய் பொருளில், 25 ரூபாய் தள்ளுபடி என பார்ப்பதை விட்டு, அந்த செலவு முதலில் தேவையானதா என, யோசிக்க வேண்டும்.

எப்போது தேவை: தேவைக்கு அதிகமாக செலவு செய்ய வைப்பதில், தள்ளுபடி முக்கிய பங்கு இருக்கிறது. ஒரு பொருள் குறைந்த விலையில் கிடைப்பதாக சொல்லப்படுவதை பார்த்ததுமே, அதை வாங்கி விடுகிறோம். ஆனால் அந்த பொருள் தேவையானதா... என்பதை பார்ப்பதேயில்லை. எனவே, வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியலை தயார் செய்து, அதில் உள்ள பொருள் தள்ளுபடியில் கிடைத்தால் வாங்கலாம்.

கடன் வலை: கையில் கிரெடிட் கார்டு இருக்கும் போது, இயல்பாகவே அதிகமாக வாங்கத் தோன்றலாம். உபரி பணம் பற்றி ஏற்படும் மிகை நம்பிக்கையே, இதற்கு காரணம். அதிலும் குறைந்தபட்ச தொகையை செலுத்தி, பின் பார்த்துக் கொள்ளலாம் எனும் அணுகுமுறை கடன் வலையில் சிக்க வைக்கும். கிரெடிட் கார்டை பயன்படுத்தினாலும், அத்தியாவசியமான பொருளை தான் வாங்குகிறோமா... என, உறுதி செய்து கொள்ள வேண்டும்.

சலுகைகள் கவனம்: பல நிறுவனங்கள் உறுப்பினர்களுக்கான சலுகை திட்டங்கள் மற்றும் போனஸ் புள்ளிகளை வழங்குகின்றன. இவற்றை கூட்டிக்கழித்துப் பார்த்தால் செலவு கணக்கு தான் அதிகம் இருக்கும். நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தக்கூடிய பொருட்களாக இருந்தால் மட்டுமே, உறுப்பினர் சலுகைகள் பற்றி யோசிக்க வேண்டும். அப்போது கூட, ஒட்டுமொத்த செலவுகளை கணக்கு போட்டு லாபம் இருக்கிறதா என, பார்க்க வேண்டும்.

- Dina Malar

மேலும் பணம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers