சவுதி அரேபியாவில் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டதாக 200 பேர் கைது!

Report Print Balamanuvelan in மத்திய கிழக்கு நாடுகள்

கட்டுப்பாடுகளுக்கு பேர் போன சவுதி அரேபியாவில் சமீப காலமாக கட்டுப்பாடுகள் சற்று நெகிழ்த்தப்பட்டுள்ள நிலையில், பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டதாக 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஆண்களும் பெண்களுமாக 120 பேர், பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டது, கண்ணியமாக உடை அணியாதது போன்ற குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டனர்.

மீதமுள்ள 88 பேர், பெண்களிடம் அத்துமீறியது தொடர்பாக கைது செய்யப்பட்டார்கள். ரியாத்தில் இம்மாத துவக்கத்தில் நடந்த இசை விழா ஒன்றின்போது, பல பெண்கள் தங்களிடம் ஆண்கள் அத்துமீறியதாக புகாரளித்திருந்தனர்.

இது போக, முறையான உடை அணியாதவர்களும் சிக்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சமீப காலமாகத்தான் இளவரசர் முகமது பின் சல்மான் கட்டுப்பாடுகள் நிறைந்த நாட்டில் சில கட்டுப்பாடுகளை நெகிழ்த்தத் தொடங்கினார்.

திரைப்படங்களுக்கு அனுமதி, பெண்கள் கார் ஓட்ட அனுமதி மற்றும் ஆண்களும் பெண்களும் இணைந்து இசை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளை காண அனுமதி ஆகிய விடயங்கள் அனுமதிக்கப்பட்டன.

ஆனால், செப்டம்பரில் பொது இடங்களில் அநாகரீகமாக நடந்து கொள்ளுதல், கண்ணியமாக உடையணியாதது மற்றும் பொது இடத்தில் காதலை வெளிப்படுத்தும் செயல்களில் ஈடுபடுதல் ஆகிய குற்றங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அரசு மீண்டும் அறிவித்தது.

வெறும் எண்ணெய் வியாபாரத்தை மட்டும் நம்பியிருப்பது இனி வரும் காலத்தில் வேலைக்கு ஆகாது என முடிவு செய்துள்ள சவுதி அரேபியா, தனது கவனத்தை சுற்றுலா பக்கம் திருப்பியுள்ள நிலையில், சுற்றுலா விசாக்களை விநியோகிக்கத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

சுற்றுலாப்பயணிகளுக்கு பர்தா அணிவதிலிருந்து விலக்கு போன்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ள நிலையிலும், பெண்கள் தோள் மற்றும் முழங்கால் தெரியும் வகையில் உடையணிதல் போன்ற விடயங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...