பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ஹரிரி.. தொடர் போராட்டத்தில் எதிரொலி

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் நாட்டின் பிரதமர் சாத் ஹரிரி செவ்வாயன்று தனது பதவியை ராஜினாமா செய்து அரசாங்கத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

லெபனான் வீதிகளில் போராடும் மக்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக நான் ராஜினாமா செய்கிறேன் என்று ஹரிரி தொலைக்காட்சி உரையில் கூறினார், லெபனான் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான பாப்தா ஜனாதிபதி மாளிகைக்குச் சென்று ஜனாதிபதி மைக்கேல் அவுனிடம் தனது ராஜினாமாவை சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான அரசியல் தலைவர்கள் மீது பெருகிய கோபத்தின் மத்தியில் அரசாங்கம் ராஜினாமா செய்யக் கோரி கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததின் எதிரொலியாக பிரதமர் ராஜினாமா செய்துள்ளார்.

பதவிகள் வந்து செல்கின்றன, ஆனால் நாட்டின் கண்ணியமும் பாதுகாப்பும் மிக முக்கியமானது என்று ஹரிரி கூறினார்.

முன்னதாக, ஆர்ப்பாட்டங்களுக்கு எதிர்வினை ஆற்றும் விதமாக சீர்திருத்தங்களை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு 72 மணிநேர காலக்கெடுவை வழங்கினார் ஹரிரி.

காலக்கெடு முடிந்தவுடன், அவர் ஒரு சீர்திருத்தத்தை அறிவித்தார், அதில் அமைச்சர்களின் சம்பளத்தைக் குறைப்பது மற்றும் வங்கிகள் மீதான வரி ஆகியவை அடங்கும்.

தனது அரசாங்கத்தின் சீர்திருத்தங்களுக்கு சர்வதேச ஆதரவைப் பெறுவதற்கான முயற்சிகளை ஹரிரி மேற்கொண்டார். அதன் பகுதியாக கடந்த வாரம் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவைச் சேர்ந்த தூதர்கள் உட்பட வெளிநாட்டு அரசாங்கங்களின் அதிகாரிகளை சந்தித்தார்.

ஆனால் சீர்திருத்தங்களுக்கான உள்நாட்டு ஆதரவு தடுமாறியது. ஆர்ப்பாட்டக்காரர்கள் ஹரிரி மற்றும் அவரது அரசாங்கத்தால் செய்யப்பட்ட நிதி சீர்திருத்தங்களை நிராகரித்தனர், அனைத்து அமைச்சரவை உறுப்பினர்களும் முறையாக ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக இருந்தனர்.

ஹரிரியின் ராஜினாமாவை அடுத்து புதிய அரசாங்கத்தை அமைக்க லெபனான் அரசியல் தலைவர்களுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்