வெளிநாட்டு விமான நிலையத்தில் இந்திய இளைஞரின் மோசமான செயல்: அதிகபட்ச தண்டனை வழங்கி தீர்ப்பு

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்

ஐக்கிய அமீரகத்தின் துபாய் விமான நிலையத்தில் 2 மாம்பழங்களைத் திருடிய இந்தியர் நாடு கடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகில் பரபரப்பாக இயங்கும் விமான நிலையங்களில் துபாய் சர்வதேச விமான நிலையமும் ஒன்று. இங்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்த விமான நிலையத்தின் டெர்மினல் 3-ல் 27 வயது இந்திய இளைஞர் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். சம்பவத்தன்று இவருக்கு கடுமையான தண்ணீர்த் தாகம்.

பக்கத்தில் தண்ணீர் இல்லை. அப்போது கன்வேயர் பெல்ட்டில் பயணிகளின் லக்கேஜ்கள் சென்று கொண்டிருந்தன.

அதில் சென்ற ஒரு பாக்ஸை திறந்து தண்ணீர் இருக்கிறதா என்று சோதனையிட்டுள்ளார். ஆனால், மாம்பழங்கள் இருந்தன.

அதில் இருந்து இரண்டு மாம்பழங்களை எடுத்து அவர் தின்றுள்ளார். பின்னர் வழக்கம் போல அவர் வேலையை தொடர்ந்து கொண்டிருந்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவத்தில், கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அவருக்கு துபாய் பொலிசார் சம்மன் அனுப்பினர்.

மட்டுமின்றி அவர் தங்கியிருந்த அறையில் திருட்டுப் பொருட்கள் ஏதும் இருக்கிறதா என தேடியும் பொலிசாருக்கு ஏதும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், சிசிடிவி கமெராவை பரிசோதித்தபோது இந்திய விமானம் ஒன்றின் பயணிகள் லக்கேஜை அவர் திறந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து அவரை கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட இந்தியர் தரப்பில், தாகத்தால் 6 திர்ஹாம் மதிப்புள்ள இரண்டு மாம்பழங்கள் மட்டுமே எடுத்ததாகக் கூறப்பட்டது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அபராதமாக ஐயாயிரம் திர்ஹம் செலுத்த வேண்டும் என்றும் பின்னர் அவரை நாடுகடத்தலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து அவர் விரைவில் நாடுகடத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்