பெரும் பதற்றத்திற்கு மத்தியில் ஏவுகணை சோதனை நடத்திய ஈரான்

Report Print Vijay Amburore in மத்திய கிழக்கு நாடுகள்
147Shares

அமெரிக்கா மற்றும் பிரித்தானிய நாடுகள் உடனான பெரும் பதற்றத்திற்கு மத்தியில், பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறி ஈரான் நேற்று ஏவுகணை சோதனை நடத்தியிருக்கிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன் தங்களுடைய வான்வெளியில் பறந்த அமெரிக்க ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்தது.

அதனை தொடர்ந்து சில நாட்களில் தங்களுடைய வான்வெளியில் பறந்த இரண்டு ஈரான் நாட்டுக்கு சொந்தமான ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் ஈரான் அதற்கு மறுப்பு தெரிவித்தது.

இதனால் இரு நாடுகளுக்கு மத்தியிலும் பெரும் பதற்றம் நிலவி வந்த நிலையில், ஐரோப்பிய தடைகளை மீறி சிரியா நாட்டுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்வதாக கூறி, ஈரான் நாட்டு கப்பலை பிரித்தானிய கடற்படை கைப்பற்றியது.

இதற்கு பழிவாங்கும் விதமாக, மீன் படகு மீது விபத்து ஏற்படுத்தியதாக கூறி இரண்டு பிரித்தானிய கப்பல்களை ஈரான் கடற்படையினர் கைப்பற்றினர்.

இந்த நிலையில் சஹாப் -3 ஏவுகணை தெற்கு ஈரானில் இருந்து புதன்கிழமை ஏவப்பட்டு, 680 மைல்களுக்கு தெஹ்ரானுக்கு கிழக்கே தரையிறங்குமாறு சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது என அமெரிக்க இராணுவ அதிகாரியை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

முக்கியமாக ஏவுகணை ஈரானிய எல்லைக்கு வெளியே செல்லாமல் பறந்தது. இந்த சோதனை ஈரான் ஏவுகணைகளின் வீச்சு மற்றும் துல்லியத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது எனவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்