சவுதி கூட்டுப் படைகள் தாக்குதல்... பாடசாலைக் குழந்தைகளின் இறுதி ஊர்வலம்: குவிந்த சிறார்கள்

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்

ஏமனில் சவுதி கூட்டுப் படைகள் தாக்குதலில் கொல்லப்பட்ட குழந்தைகளின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான சிறுவர், சிறுமியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

ஏமன் தலைநகர் சனாவில் பாடசாலை அருகே சவுதி கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

இதில் குழந்தைகள் பலர் பலியாகினர். பொதுமக்கள் 54 பேர் படுகாயமடைந்தனர். பலியானவர்களில் பலரும் 9 வயதுக்குள்ளானவர்கள்.

இன்னும் பல குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்தத் தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளதுடன் ஜனவரி மாதத்திலிருந்து ஏமனில் நடந்த வான்வழித் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பாடசாலை தாக்குதலில் பலியான குழந்தைகளின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான சிறுவர், சிறுமியர் கலந்துகொண்டு தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

இரங்கல் ஊர்வலத்தில் கலந்து கொண்ட சிறுமி ஒருவர், எனது தங்கை ஏதும் செய்யவில்லை. அவள் மீது எந்தத் தவறும் இல்லை. எந்த சூழ் நிலை இருந்தாலும் அல்லா இதற்கான பதிலடியை கொடுப்பார் என தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த ஜனாதிபதி மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.

இதில் ஜனாதிபதி மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்பட்டு வருகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஏமன் அரசுடன் இணைந்து சவுதி நடத்தும் மனிதாபிமானமற்ற தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை முன்னரே கண்டித்துள்ளது.

இப்போரில் இதுவரை 11,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 5,000 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்