இரக்கம் இல்லையா உங்களுக்கு? பத்திரிகையாளர் ஜமால் மகனுக்கு ஆறுதல் கூறிய சவுதி இளவரசரை விளாசும் நெட்டிசன்கள்

Report Print Kabilan in மத்திய கிழக்கு நாடுகள்

பத்திரிகையாளர் ஜமாலின் மகனை அழைத்து ஆறுதல் கூறிய சவுதி இளவரசரை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனங்கள் செய்து வருகின்றனர்.

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி துருக்கி நாட்டில் உள்ள தூதரகத்திற்கு சென்றபோது கொலை செய்யப்பட்டதாக வெளியான செய்தியால், உலக நாடுகளின் கண்டனத்திற்கு சவுதி அரேபியா உள்ளானது.

சவுதி இளவரசர் முகமது பின் சல்மானை கடுமையாக விமர்சித்து வந்ததால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என இளவரசர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜமாலின் மகன் சலாவை ரியாத் அரண்மனைக்கு வரவழைத்து சவுதி மன்னரும், இளவரசரும் ஆறுதல் தெரிவித்தனர். அத்துடன் சலா மற்றும் சகோதரர் சாஹலுடன் இளவரசர் முகமது பின் சல்மான் கைகுலுக்கியுள்ளார்.

இந்த புகைப்படத்தை சவுதி அரண்மனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். முன்னதாக, சலாவின் தந்தை ஜமால் சவுதியை விமர்சித்து கட்டுரை எழுதியதால், சலாவிற்கு வெளியே செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், ஜமால் கொலையால் பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில், சலாவை நேரில் அழைத்து சல்மான் ஆறுதல் கூறியது சமூக வலைதளங்களில் நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

தந்தையை கொன்ற புகாருக்கு ஆளாகிய நிலையில், அவரது மகனுடன் கைகுலுக்கும் உங்களுக்கு இரக்கமில்லையா என்றும், சவுதி அரசின் இதுபோன்ற நடவடிக்கைகள் சகிக்க முடியாதவை என்றும் பலர் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers