கொடூர சித்திரவதை... உயிருடன் இருப்பேனா சந்தேகம்: கடத்தப்பட்ட துபாய் இளவரசியின் பகீர் வீடியோ

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்

ஐக்கிய அமீரகத்தின் துபாயில் இருந்து தப்பிக்க முயன்று பின்னர் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட துபாய் இளவரசி வெளியிட்ட பகீர் வீடியோ அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய அமீரகத்தின் துணை குடியரசு தலைவரும் துபாய் பிரதமராகவும் இருப்பவர் ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தும். இவரது 30 பிள்ளைகளில் ஒருவரான 32 வயது இளவரசி லதிஃபா தமது தந்தையின் கட்டுப்பாடுகளில் இருந்து விடுபட எண்ணி கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் துபாயில் இருந்து மிக ரகசியமாக வெளியேறியுள்ளார்.

ஒரு மாத கால திட்டமிடலுக்கு பின்னர் பிரான்ஸ் நாட்டு முன்னாள் உளவாளி ஒருவரின் உதவியுடன் இளவரசி லதிஃபா துபாயில் இருந்து தப்பித்துள்ளார்.

ஆனால் அவரது திட்டம் குறித்த தெரியவந்த துபாய் அரச குடும்பம் துரிதமாக செயல்பட்டு சர்வதேச கடற்பகுதியில் வைத்து இளவரசியை கொடூரமாக தாக்கி மீண்டும் துபாய் நாட்டுக்கே இழுத்துச் சென்றது.

அதன் பின்னர் பின்னர் இளவரசி லதிஃபா தொடர்பில் எந்த தகவலும் வெளிவராமல் இருந்தது. இந்த நிலையில் இளவரசி லதிஃபா பதிவு செய்த 40 நிமிட காணொளி ஒன்றை மனித உரிமைகள் அமைப்பு ஒன்று தற்போது வெளியிட்டுள்ளது. அதில் அவர் வெளிப்படுத்தியுள்ள தகவல்கள் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.

தாம் தொடர் சித்திரவதைக்கு உள்ளாவதாகவும், உயிருடன் இருப்பேனா அல்லது அதைவிட கொடூரமாக குற்றுயிராக விடப்படுவேனா தெரியாது என கூறும் அவர், ஐக்கிய அமீரகத்தின் முற்போக்கு நடவடிக்கைகள் அனைத்தும் கபட நாடகம் எனவும் லதிஃபா தெரிவித்துள்ளார்.

தற்போது இளவரசி லதிஃபா துபாயில் சிறை வைக்கப்பட்டுள்ளாரா அல்லது வேறு ஏதேனும் ரகசிய சிறையில் வைக்கப்பட்டுள்ளாரா என்பது அங்குள்ள அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஆனால் மன்னராட்சி நடைபெறும் துபாய் போன்ற இஸ்லாமிய நாட்டில் மனித உரிமை அமைப்புகளுக்கு ஒரு எல்லை வரையே அனுமதி அளிக்கப்படும்.

இளவரசி லதிஃபா தப்பிச்செல்ல உதவிய அவரது பெண் நண்பர் மற்றும் பிரான்ஸ் முன்னாள் உளவாளி என இருவரும் தற்போது துபாய் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச அளவில் எழும் அழுத்தமே இளவரசி லதிஃபா தொடர்பில் துபாய் அதிகாரிகளை உண்மை நிலையை வெளிப்படுத்த வைக்கும் என இளவரசி லதிஃபாவின் நண்பர்களும் நலம் விரும்பிகளும் தெரிவிக்கின்றனர்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers