சவுதி அரச குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல்: ஏமன் கிளர்ச்சியாளர்கள் அட்டகாசம்

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்

ஏமன் கிளர்ச்சியாளர்களால் மீண்டும் ஏவுகணை தாக்குதல் அபாயம் உள்ளதால் சவுதி அரச குடும்பத்தினர் மற்றும் எண்ணெய் விநியோக பகுதிகளுக்கு பாதுகாப்பை இரட்டிப்பாக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ள சவுதி அரச குடும்பத்தின் அரண்மனை நோக்கி ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்ட ஏவுகணையை சவுதி ராணுவம் சுட்டு வீழ்த்திய நிலையில் இந்த கோரிக்கை வலுவடைந்துள்ளது.

ஆனால், சவுதிக்கு எதிரான தாக்குதலில் இது ஒரு புதிய துவக்கம் எனவும், அடுத்தடுத்த தாக்குதல்கள் மிக விரைவில் எதிர்பார்க்கலாம் எனவும் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சவுதி அரண்மனை, ராணுவ தளம் மற்றும் எண்ணெய் விநியோக தலம் ஆகியவை தற்போது தங்கள் தாக்குதல் வட்டத்தில் இருப்பதாகவும் கிளர்ச்சியாளர்கள் தங்கள் ஆதரவு தொலைக்காட்சியில் அறிவித்துள்ளனர்.

சவுதி அரசியல் தலைவர்கள் மேற்கொண்ட ஆலோசனைக் கூட்டத்தை சீர்குலைக்கும் பொருட்டே இன்றைய தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதை அவர்கள் முறியடிப்பார்கள் என தங்களுக்கு தெரியும் எனவும் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.

சவுதி அரசு தமது வருடாந்தர நிதி நிலை அறிக்கை தொடர்பாக நாட்டு மக்களுக்கு அறிவிக்க இருந்த நிலையில் குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ரியாத் வான் எல்லைக்குள் குறித்த ஏவுகணை புகுந்த மறுகணமே சவுதி ஏவுகணை தடுப்பு அமைப்பு எதிர் தாக்குதலை தொடுத்துள்ளதாகவும்,

இதனால் குறித்த ஏவுகணை ஆகாயத்திலேயே தாக்கி முறியடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கடந்த மாதம் இதேபோன்று ரியாத்தில் உள்ள கிங் காலீத் விமான நிலையம் மீது கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்ட ஏவுகணையை சவுதி ராணுவம் தடுத்து முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்