சவுதியில் பெண்கள் அடிமைகளே: கார் ஓட்டியதற்காக கைதான பெண் குற்றச்சாட்டு

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்

சவுதி அரேபியாவில் தற்போதும் பெண்கள் அடிமைகளை போலவே பார்க்கப்படுவதாக, கார் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டு 9 நாட்கள் சித்திரவதை அனுபவித்த பெண் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தற்போது அவுஸ்திரேலியாவின் சிட்னியில் குடியேறியிருக்கும் மானல் எ ஷாரிஃப் என்ற இளம்பெண் கார் ஓட்டியதற்காக கடந்த 2011 ஆம் ஆண்டு சவுதி பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து 9 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு நாள்தோறும் கசையடி வழங்கப்பட்டு துன்புறுத்தப்பட்டதாகவும் தற்போது மனம் திறந்துள்ளார்.

உலகத்திலேயே சவுதி அரேபியாவில் தான் பெண்கள் கார் ஓட்டுவதற்கும் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து கடந்த 2011ம் ஆண்டு மானல் எ ஷாரிஃப் போராட்டம் நடத்தினார். மேலும் அவர் கார் ஓட்டும் வீடியோ ஒன்றையும் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தார்.

அந்த காணொளியானது ஒரே நாளில் 700,000 பேர் பார்வையிடும் அளவுக்கு வைரலானது. இதனையடுத்து மானல் மீது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. மட்டுமின்றி மன நிலை பாதிக்கப்பட்டவர் எனவும் அடிப்படைவாதிகளால் குற்றச்சாட்டப்பட்டார். மேலும் அலைபேசி மூலம் தொடர்ந்து பாலியல் ரீதியான தொந்தரவுகள் பல வந்ததாகவும் அவர் கூறினார்.

இதனிடையே மானல் கைதானதும் அவரது குழந்தையை அவரிடம் இருந்து பிரிக்கும் நடவடிக்கையை கணவரின் குடும்பத்தினர் மேற்கொண்டுள்ளனர். மட்டுமின்றி சவுதி அராம்கோ நிறுவனத்தில் செய்துவந்த வேலையும் பறிபோனது.

தற்போது தமது இரண்டாவது கணவருடன் சிட்னியில் நிரந்தரமாக குடியேறியிருக்கும் 38 வயது மானல் Daring To Drive எனும் புத்தகத்தில் தமது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

தனக்கு நேர்ந்த கொடூர அனுபத்தில் இருந்து மானல் கூறும்போது, மற்ற எல்லா நாடுகளிலும் 18 வயதை தாண்டினால் பெண்கள் மேஜராக கருதப்படுகிறார்கள்.

ஆனால் சவுதியில் மட்டும், 18 வயதை தாண்டினாலும் அவர்கள் குழந்தைகளாகவே நடத்தப்படுகிறார்கள். 18 வயதை தாண்டினாலும் கடவுச்சீட்டு பெற வேண்டுமானாலும் பெண்கள் அவர்களுடைய தந்தையிடம் அனுமதி பெற வேண்டும்.

சவுதி சமூகம் பெண்களை அரசியாக சித்தரித்தும், ஆண்களை அரசர்கள் போல சித்தரித்தும், பெண்களை எப்பொழுதும் ஆண்களின் கட்டுப்பாட்டிலேயே வைத்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments