வடகொரிய மக்களுக்கு அதிர்ச்சி அளித்த மலேசியா

Report Print Arbin Arbin in மலேசியா

வடகொரிய ஜனாதிபதியின் சகோதரர் கிம் ஜோங் நம் கொலை காரணமாக மலேசியாவில் வட கொரிய மக்களுக்கு அனுமதித்திருந்த விசா இன்றி பயணம் செய்யும் சலுகையை மலேசியா அரசு ரத்து செய்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பை மேற்கோள்காட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மலேசிய துணை பிரதமர் அக்மத் சாஹித் ஹமிதி தெரிவித்துள்ளார்.

வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி முதல் வட கொரியா மீதான விசா இன்றி பயணம் செய்யும் சலுகை ரத்து செய்யப்படும் முறை நடைமுறைக்கு வரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்துக்கு கடந்த மாதம் 13 ஆம் திகதி வந்த வடகொரியா ஜனாதிபதியின் சகோதரர் கிம் ஜாங் நம் முகத்தில் அடையாளம் தெரியாத இரு பெண்கள் தடை செய்யப்பட்ட விஷ திராவகத்தை ஊற்றினர்.

வலியால் துடித்த கிம் ஜாங் நம் அடுத்த சில நிமிடங்களுக்குள்ளாகவே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தக் கொலை தொடர்பாக விசாரணை நடத்திய மலேசிய பொலிஸார் இந்தோனேஷியாவைச் சேர்ந்த சித்தி ஆயிஷா (25), வியட்நாமின் டுவன் தை ஹுவாங் (28) என்ற இரு பெண்களை கைது செய்தனர்.

இருவரையும் நேற்று கோலாலம்பூர் நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்படுத்தினர். அப்போது இருவர் மீதும் கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருப்பதாக நீதிபதி படித்து காண்பித்தார். பின்னர் பலத்த பாதுகாப்புடன் மீண்டும் சிறைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.

மலேசிய சட்டப்படி குற்றவாளிகள் மீதான கொலை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments