தினமும் 15 நிமிடங்கள் நடப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

Report Print Trinity in வாழ்க்கை முறை

ஆரோக்கியம் குறித்து நாம் எந்த மருத்துவரிடம் சென்றாலும் நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்ற அறிவுரையை கேட்கத் தவறுவதேயில்லை.

அப்படி என்னதான் இருக்கிறது இந்த நடைப்பயிற்சியில் என்று பார்க்கலாம் வாருங்கள்.

தினமும் 15 முதல் 30 நிமிடங்கள் நடப்பதன் மூலம் நம் உருவத்தில் மட்டுமல்ல ஆரோக்கியத்திலும் ஏகப்பட்ட நல்மாற்றங்கள் ஏற்படுகிறது

மூளையில் ஏற்படும் நேர்மறை மாற்றங்கள்

ஏரோபிக் பயிற்சிகள் மூலம் அல்சீமர் மற்றும் முதுமையில் ஏற்படும் மறதி போன்றவற்றை தடுக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அது மட்டுமல்லாமல் மன அழுத்தம் போன்ற உளவியல் பிரச்னைகளையும் சீரான நடைப்பயிற்சி சரி செய்கிறது.

கண்பார்வை மேம்படும்

கால்களுக்கும் கண்களுக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்க வைக்கும் இந்த தலைப்பு உண்மையைத்தான் சொல்கிறது.

நடப்பதன் மூலம் குளுக்கோமா எனும் கண் நோயை சரி செய்ய முடியும் என்றொரு ஆய்வு சொல்கிறது.

இதய நோய்கள் தடுக்கப்படும்

அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் படி, ஓட்டப் பயிற்சியை விடவும் நடைப்பயிற்சி இதய நோய்கள் மற்றும் பக்கவாத நோய்கள் போன்றவற்றிலிருந்து நம்மை காப்பது தெரியவந்துள்ளது.

நடப்பதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும், ரத்த ஓட்டத்தை சீராக்கி அங்குள்ள கொழுப்புகளை கரைப்பதின் மூலம் இதய நோய்களிலிருந்து நாம் காக்கப்படுகிறோம்.

நுரையீரல் சீராக செயல்படும்

ஏரோபிக் பயிற்சிகளில் ஒன்றான நடைபயிற்சி மூலம் ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கப்படுகிறது, இதன்மூலம் நுரையீரலின் உள்வாங்கும் திறன் மேம்படுகிறது.

அதுமட்டுமன்றி நச்சுக்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்றுகிறது, நுரையீரல் நோய்கள் கூட சரியாகும்.

கணையத்திற்கு ஏற்படும் நன்மைகள்

தொடர்ந்து நடைப்பயிற்சி மூலம் நீரிழிவு பாதிப்பை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். நடப்பவர்கள் மற்றும் ஓடுபவர்கள் இருவரும் கலந்து கொண்ட ஒரு ஆய்வின் முடிவில் ஓடுபவர்களை விட நடப்பவர்களுக்கே ரத்த சர்க்கரையை செல்கள் உட்கொள்ளும் தன்மை மற்றும் குளுக்கோஸ் கட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை ஆகியவை 6 மடங்கு அதிகரித்துள்ளது என்பது நல்ல விஷயம் அல்லவா?

செரிமானம் சீராகும்

ஒவ்வொரு நாளும் 30 நிமிடங்கள் நடப்பதன் மூலம் குடல் புற்று நோயிலிருந்து நாம் காக்கப்படுகிறோம். மேலும் நடப்பதால் ஜீரண உறுப்புகள் மற்றும் குடல் இயக்கங்கள் இலகுவாகும், மலச்சிக்கல் நோயிலிருந்து விடுதலை அடையலாம்.

தசைகள் வலுவடையும்

ஒரு நாளில் 10000 அடிகளை எடுத்து வைப்பது என்பது ஜிம்மில் ஒரு நாள் ஒர்கவுட் செய்வதற்கு சமம் என்றால் கேட்க இனிமையாக இருக்கிறது அல்லவா? ஆமாம்.

இதன் மூலம் தசைகள் வலுவடையும். ஜிம் ஒர்கவுட் விட உடலளவில் இதன் பாதிப்புகள் குறைவாக இருக்கும்.

உறுதியான எலும்புகள் மற்றும் மூட்டுகள்

தினசரி குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு தொடர்ந்து நடைப்பயிற்சி செய்தால் மூட்டுகள் இலகுவாகும், வீக்கங்கள் மற்றும் வலிகள் குறையும்.

மேலும் மூட்டுகள் இயக்கம் சரியாக இருக்கும், எலும்பு முறிவுகள் போன்றவற்றில் இருந்தும் காப்பாற்றப்படுவோம் என்பது சுகமான செய்திதான் அல்லவா

முதுகு வலியிலிருந்து விடுதலை

தீராத முதுகுவலியால் அவதிப்படுவர்களுக்கு அந்த வலியிலிருந்து வாழ்நாள் நிவாரணம் அளிக்கிறது நடைப்பயிற்சி.

முதுகெலும்பில் உள்ள ரத்த நாளங்களுக்கு சீரான ரத்த ஓட்டம் பாய்வதே இதற்கு காரணம்.

மன அமைதி மேம்படும்

தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வது மன அழுத்தம், மனச்சோர்வை விரட்டும், நம் நண்பர்களுடனோ, நம் மனதுக்கு பிடித்தவருடனோ நடப்பது சுகமான விடயம் தானே!!

Photos Credit: © depositphotos

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்