இன்டர்வியூவிற்கு செல்லப் போறீங்களா? ஒரு நிமிடம்

Report Print Amirah in வேலைவாய்ப்பு

இன்டர்வியூ எனப்படும் நேர்முகத் தேர்வு என்பது வேலைவாய்ப்பை வழங்கும் ஒரு நிர்வாகம், விண்ணப்பதாரரை மதிப்பீடு செய்வதற்கான ஒரு நேர்முக சந்திப்பு என்று கூறலாம்.

இது வேலை வாய்ப்பை வழங்குவோர், பெறுவோர் ஆகிய இரு தரப்பின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள ஏதுவான ஒரு வழி. வேலை வாய்ப்பை வழங்கும் நிறுவனத்திற்குத் தேவை திறமையான நன்னடத்தை கொண்ட நபர்.

விண்ணப்பதாரர் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பது முக்கியம் என்றாலும், நேர்முகத் தேர்வு நடைபெறும் அந்த சில நிமிட நேரங்களில் அதனை வெளிப்படுத்துவது அதைவிட முக்கியமானதாகும்.

நேர்முகத் தேர்விற்கு செல்லும் ஒருவர் கவனிக்க வேண்டியவை.

 • அணிந்திருக்கும் ஆடை உடம்பை மிகவும் ஒட்டியோ, கசங்கியோ, கறைபடிந்தோ, உறுத்தும் வண்ணத்திலோ இல்லாமல் சவுகரியமாகவும், அழகாகவும், இதமான வண்ணத்திலும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதிக அளவில் ‘டக் டக்’ என்று சத்தம் எழுப்பாத காலணிகளை அணிதல் வேண்டும்.
 • காய்ச்சல், இருமல், தலைவலி போன்ற சாதாரண நோய் வந்தாலும் ஒரு வித சோர்வு இருக்கும். அது உங்களுக்கும் நேர்முகத் தேர்வு நடத்துபவருக்கும் இடையில் ஒருவித அசௌகரியத்தை ஏற்படுத்தும் எனவே உடல் நலம் பேணுவது முக்கியம்.
 • சாதி மதம் சம்பிரதாயங்களை அதாவது திருநீறு, சிலுவை, தாயத்து போன்றவற்றை தவிர்த்தல் நல்லது. கொலுசு அணிவதை தவிர்க்கவும். அப்பல் அழும்பல் இல்லாத ஒப்பனை நல்லது. நவநாகரிக உடை அணிவதை விட நாகரிகமான உடை அணிவது நல்லது.
 • தலைவலியை உண்டாக்கும் வகையிலான வாசனை திரவியங்களை தவிர்க்க வேண்டும். கைபேசி (மொபைல் போனை) இயக்கத்தை நிறுத்தி விட வேண்டும்.
 • சம்பந்தப்பட்ட கல்விச் சான்றிதழ்கள், நற்சான்றிதழ், முன் அனுபவ சான்றிதழ் போன்றவற்றை தேர்வின் போது பதட்டமின்றி எடுத்துக் காண்பிக்கும் வகையில் முன்னதாக உரிய முறையில் அடுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
 • எந்த நிறுவனத்திற்காக இது நடத்தப்படுகிறதோ அந்த நிறுவனம் பற்றிய தகவல்களை முடிந்தவரை சேகரித்துக் கொள்ள வேண்டும். விண்ணப்பத்தின் நகலையும் கையில் வைத்துக் கொள்வது நல்லது. அப்போதுதான் விண்ணப்பத்தில் நீங்கள் குறிப்பிட்டது தொடர்பான கேள்விகள் வரும்போது மாற்றிச் சொல்லிவிடாமல் சரியாகச் சொல்ல முடியும்.
 • அனுமதி பெற்று அறைக்குள் செல்ல வேண்டும். அறைக்குள் செல்லும்போது முகத்தில் உற்சாகள் தைரியம் இருப்பதை வெளிப்படுத்தும் வகையில் மென்மையாக புன்னகை இருக்க வேண்டும்.
 • அனைவரையும் பார்த்து வணக்கம் கூறி, அமர வேண்டும். தேவையெனில் கைகுலுக்குங்கள். நாற்காலியில் உட்காரும் போது நிமிர்ந்து உட்கார வேண்டும். தைரியமான தோற்றத்துடன் இருக்க வேண்டும்.
 • உங்கள் திறமையை அறிய வல்லுநர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதட்டமில்லாமல் பதிலளிக்க வேண்டும். பதில்கள் அறிவு பூர்வமாக இருக்க வேண்டும்.
 • ஒரு கேள்விக்கு பதிலளித்து விட்டு அடுத்த கேள்விக்கு பதிலளிக்க வேண்டும். அனைவரிடமும் ஒரே மாதிரி மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
 • கவனம் சிதறுவதற்கான சூழல் அங்கிருந்தாலும் கவனம் சிதறாமல் நடந்து கொள்ள வேண்டும்.
 • நேர்முகத் தேர்வுக்குச் செல்லும்போது சிறிதளவு பயம் இருக்கலாம். தவறில்லை. காரணம் அந்த பயமே நாம் நன்றாக செய்ய வேண்டும் என்றதன் உந்துதலை தரும். அதற்காக வியர்த்து விறுவிறுக்கும்படியான பயம் அனாவசியமானது.
 • தெரியாததைக் கேட்டு விடுவார்களோ என்ற பயத்தில் தெரிந்த கேள்விக்கும் விடையளிக்க இயலாத நிலை ஏற்பட்டு விடக் கூடாது.
 • உங்களைப் பற்றிய, பொது அறிவு சார்ந்த, திறமைகள் குறித்த கேள்விகளே பெரும்பாலும் இடம்பெறும். ‘உங்களைப் பற்றி கூறுஙகள்’ என்றவுடன் பலபேர் தங்கள் பெயர், ஊர், பெற்றோர், குடும்பம் பற்றிய விவரங்களை சொல்ல முற்படுகின்றனர். அவர்கள் எதிர்பார்ப்பது இதை அல்ல. உங்களின் தனித்தன்மை, படிப்பு, அனுபவம், சாதனை, பலம், லட்சியம், ஆளுமை, திறமை, விருப்பம் போன்றவை குறித்த விவரங்களைத்தான்.
 • சிறப்பான அம்சங்களைச் சொன்னால் தான் வேலை கிடைக்கும் என்று இல்லாத ஒன்றைச் சொல்ல முற்படும்போதுதான் பிரச்சனை ஆரம்பிக்கும். நீங்கள் மிகைப்படுத்தி சொல்கிறீர்கள். அல்லது பொய் சொல்கிறீர்கள் என்று தேர்வு வல்லுநர்கள் கருதினால் உங்கள் பதிலில் இருந்தே பல கேள்விகளைக் கேட்டு உண்மையைச் சொல்லும்படியும் செய்து விடுவர்.
 • பதிலைத் தெளிவாக, சுருக்கமாக கூற வேண்டும். எதிர்த்துப் பேசும் விதமாகவோ, கர்வமாகவோ பேசக் கூடாது. உறவுக்காரரே வல்லுநர்களில் ஒருவராக இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளக் கூடாது.
 • நேர்முகத் தேர்வில் ஒருவரை மட்டுமே தொடர்ந்து உற்று நோக்கிக் கொண்டிருக்காமல் அனைவரையும் பார்க்க வேண்டும்.
 • நேர்முகம் முடிந்து விடைபெறும் போது நிறுவனத்திடம் நீங்கள் கேட்டறிய வேண்டியது ஏதேனும் இருப்பின் கேட்டு தெரிந்து தெளிவு பெறலாம்.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments