வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தயாராகுபவர்களே!

Report Print Amirah in வேலைவாய்ப்பு

வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தயாராகுபவர்களே, வெற்றி எனும் இலக்கை அடைய பல்வேறு முயற்சிகள் செய்கின்றனர். வெற்றிக்கான வேட்கை தேடுதலாக, அவர்கள் கல்லுாரியில் காலடி எடுத்து வைக்கும் நேரம் முதலே துவங்குகிறது.

பெற்றோரின் எதிர்பார்ப்பு, கனவு களோடு கல்லுாரியில் நுழையும் மாணவர்கள் பாடத்திட்டங்களை படித்துவிட்டால் மட்டுமே, வெற்றி பெற முடியும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. விஞ்ஞானம், தொழில்நுட்பம் சார்ந்த, வர்த்தக ரீதியான உலகில் குறிப்பிட்ட அளவு ஏற்படும் வாய்ப்புகளுக்கு, பல லட்சம் பேர் போட்டி போடுகின்றனர்.

வெற்றி பெற வேண்டுமெனில், பாடத் திட்டங்களின் அடிப்படையைத் தாண்டி மகத்தான சக்தி அவர்களுக்குத் தேவை. அந்த சக்தி வெற்றி எனும் வாய்ப்புகள் நிறைந்த உலகிற்குள் அவர்கள் பயணித்து வெற்றிபெறுவதற்கான திறவுகோல் ஆகும். உயர்கல்வி மாணவர்கள், ஆளுமைத் திறன் கொண்டவர்களாக, வல்லமை படைத்தவர்களாக பிரகாசிக்கச் செய்யும் 'திறன்களே' அந்த திறவுகோல்.

வேலை வாய்ப்புகளைத் தாண்டி, சுய மலர்ச்சி பெறும் வகையில் தொழில் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு தேவையான செயல் திறன்களை பெருக்கிக் கொள்ள, உற்சாகத்துடன் முன்வர வேண்டும். பல கோடி பட்டதாரிகளுக்கு அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் பெற்றுக்ககொள்ள இயலவில்லை.

தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைத் தேடும்போது, அவர்கள் பெற்றிருக்கும் அடிப்படைக் கல்வியைக் காட்டிலும், திறமைகளை வேலை அளிப்போர் தேடுகின்றனர். மின்னல் வேகத்தில் பயணிக்கும் இவ்வுலகம், பல அரிய புதிய வேலைவாய்ப்புகளை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாய்ப்புகள் எதிர்காலத்தில் அறிவியல், வர்த்தகம், சுற்றுலா, கலை, மனிதவளம், மருத்துவம், சேவை என பல துறைகளில் அடங்கும்.

இத்துறைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு காலம் கடந்து வெற்றிபெற வேண்டுமெனில், திறன் சார்ந்த வாழ்க்கை முறைக்கு, மாற்றிக் கொள்ள தயாராக வேண்டும். உளவியல் ரீதியாக இதற்கு அடிப்படையும் இருக்கிறது. அது, தனி நபர் திறன்கள் அவர்களின் குணாதிசயங்களை தீர்மானிக்கிறது என்பதே. திறன்கள் தான் விஞ்ஞான உலகில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு.

திறவுகோலுக்கான தேடுதல் உயர் நிலையை அடைந்து குடும்பம், சமூக தளங்களில் வெற்றி நிறைவோடு வாழ பொருளாதார ரீதியாக கண்டிப்பாக வெற்றி பெறுவது அவசியம். வாழ்க்கையில் எதிர்நோக்கும் இலக்கை அடைய திறன்கள் இருப்பதும், இல்லாது இருப்பதும் அறிந்து கொள்வதே வெற்றிக்கு வித்திடும் முதல்படி. தன்னிலை அறிதல் நிலை, ஒரு உன்னத தேடுதலை உருவாக்க வேண்டும். அது அவர்களை மேலும் உற்சாகப்படுத்தி, தன்னிடம் இல்லாத திறன்களை வளர்த்துக் கொள்ள வழிநடத்தி, மகத்தான வெற்றி பெற ஊக்குவிப்பதே தனிச்சிறப்பு.

தொழில் சார்ந்த உலகில் பிரகாசிக்க அல்லது நல்ல தொழில் வாய்ப்புகளை பெற வேண்டுமெனில் தெளிவாக பேசும் திறனை பெற்றிருக்க வேண்டும். பேசும் கலையை இலகுவாக கற்று பயன்படுத்திக் கொள்பவர்களே, எளிதில் வெற்றி அடைவர். பேச்சுத் திறனிற்கு மொழி ஒரு தடை இல்லை. பேசுவதற்கு முக்கியத் தேவை தனது எண்ணங்களை தெளிவாக எடுத்துரைக்கும் தைரியம்தான். இது கேட்போரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்தால், வெற்றிக்கு தேடப்படும் மிகப் பெரிய சக்தியாக கருதப்படும்.வர்த்தக மற்றும் தொழில் உலகில் எழுத்து மூலம் கருத்துகளை பதிவு செய்வது இன்றியமையாதது. இத்திறனை கற்றுக் கொள்ள வேண்டும்.

அடிப்படையில் தான் சார்ந்த துறைகளில் தேவைப்படும் அறிக்கைகள் தயாரிக்க, தனது கோரிக்கையை விண்ணப்பிக்க, தொழில் சார்ந்த விஷயங்களை பகிர்ந்து கொள்வதற்கான எழுத்துத் திறன் இருத்தல் போதுமானது. பழகும் திறன் 'தனி மரம் தோப்பாகாது' என்ற அடிப்படையில் தனி நபர் தனித்து செயல்பட்டால், வெற்றி பெற இயலாது.

சமூக கட்டமைப்புகளில் மற்ற நபர்களுடன் குழுவாக பழகும் திறன் மிக அவசியம். பாரபட்சம், விருப்பு, வெறுப்பின்றி அனைவரிடமும் இயல்பாக பழகும் திறன், அனைத்துத் தொழில் துறையிலும் எதிர்பார்க்கப்படும் முக்கியத் திறனாகும். பழகும் திறனை ஒரு தனி மனிதனுக்கு சமநிலையை எடுத்துரைக்கும் வாய்ப்பாக கருத வேண்டும். ஏனெனில் தனி மனிதனின் குணாதிசயங்கள் பல நிலைகளில் வேறுபடும். வேறுபட்ட குணங்கள் கொண்ட மனிதர்கள் வாழும் சமுதாயத்தில், நாமும் வாழ்ந்து வெற்றி பெற வேண்டும் என்பது நிதர்சன உண்மை.

தொழில் துறையில் பிரகாசிக்க வேலைவாய்ப்பு பெறுவதற்கு முன்பே, தொழில் ரீதியான மனநிலைக்கு உட்படுத்திக் கொண்டு செயலாற்ற வேண்டும். நடை, உடை, பாவனை மாணவ பருவத்திலிருந்து மாறி, நிறுவனம் சார்ந்த வகையில் இருப்பதற்காக, தங்களை தயார் படுத்திக் கொள்ள முன்வர வேண்டும். ஆளுமைத்திறன் படைத்தவர்களாக செயலாற்றுவது அவசியமாகிறது. கடுமையான சூழ்நிலையில் பணியாற்ற தைரியம் படைத்தவர்களாக இருக்க வேண்டும்.

தொழில்துறையில் பல சவால்களை கண்டு பயந்து ஓடிவிடாமல், துணிவு, மன தைரியத்தோடு எதிர்கொள்ளும் திறன் படைத்தவர்களாக, தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். சவால்களைத் தாண்டி சாதனை படைப்பதில் தான் அமைகிறது, சரித்திரம் போற்றும் மகத்தான வெற்றி. சவாலை எதிர்கொள்ள சுய நம்பிக்கை, நேர மேலாண்மை, கடும் உழைப்பு, விடா முயற்சியுடன் வேக நடைபோடும் தன்மை கொண்டவர்களாக இருப்பது அவசியம்.

பட்டாம் பூச்சிகளாக வண்ணக் கனவுகளோடு, சிறகடிக்கத் துடிக்கும் நீங்களே! உங்கள் வாழ்க்கையில் வெற்றிக்கான திறவுகோலை ஆத்மார்த்தமாகத்தேடி, மேற்கொள்ளும் முயற்சியில் உன்னதமாக ஈடுபடுங்கள். உற்சாக நடை போடுங்கள்; வெற்றி மிளிரும்.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments