இன்டர்வியூக்கு போறீங்களா? சிறப்பாக செயல்பட அசத்தலான வழிகாட்டுதல்கள்

Report Print Amirah in வேலைவாய்ப்பு

நேர்காணல் என்பது தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கு முக்கியமான ஒன்றாகும். எவ்வளவு தான் படித்தாலும் நேர்காணலில் கோட்டை விட்டு விட்டால் அவ்வளவு தான்.

நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பித்தது முதல், நிறுவனத்தைப்பற்றி ஓர் ஆய்வுப் படிப்பே மேற்கொண்டு முடித்தது வரை அனைத்தையும் மிக அழகாகச் செய்பவர்கள், இறுதியில் கோட்டை விடுவது நேர்முகத் தேர்வு எனப்படும் நெருப்பு வளையத்துக்குள்தான்.

ஆனால், தகுதிகளில் நீங்கள் முழுமையானவராக இல்லாவிட்டாலும், மிக இயல்பாக எந்தப் பயமும் பதற்றமும் இல்லாமல் நேர்முகத் தேர்வை எதிர்கொண்டால், அதுவே உங்கள் வருங்காலத்துக்கான வாசலைத் திறக்கும்.

நேர்காணல்கள் பல முறைகளில் நடைபெறுகின்றன. அவற்றை எப்படி எதிர்கொள்வது? வழிகாட்டுதல்கள் இங்கே...

"நீங்கள் எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்களோ, அதற்கு ஏற்றாற்போலவும், நீங்கள் செல்லும் நிறுவனங்களுக்கு ஏற்றாற்போலவும் பலவிதங்களில் நேர்காணல்கள் அமையும். இன்று பெரும்பாலான இளைஞர்கள் எல்லாவிதமான நிறுவனங்களுக்கும் வேலைகளுக்கும் ஒரே மாதிரியான நேர்காணல்கள் இருக்கும் என்று நினைக்கின்றனர்.

நீங்கள் செல்லப் போகும் நிறுவனத்தில் இந்த வகையான நேர்காணல்தான் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தால், அந்த வகைக்கு உங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

இல்லாதபட்சத்தில், 'நீங்கள் எந்த வகையான நேர்காணல் முறையைப் பின்பற்றப்போகிறீர்கள்?' என்று அந்த நிறுவனத்தினரிடமே கேட்பதில் தவறு இல்லை. விதிகளை அறிந்துகொண்டு விளையாடும் போட்டி போன்றதுதான் இதுவும்.

இன்டர்வியூ வகைகளை மஃபாய்' நிறுவனத்தின் மனித வளத் துறைத் தலைவர் நெடுமாறன் பட்டியலிட்டிருக்கின்றார்.

ஸ்க்ரீனிங் இன்டர்வியூ The Screening Interview

சம்பந்தப்பட்ட பதவிக்கு ஏற்ற குறைந்தபட்சத் தகுதி உங்களிடம் இருக்கிறதா என்பதை அறிவதுதான் இந்த 'ஸ்க்ரீனிங் இன்டர்வியூ'வின் நோக்கம். இன்றைக்குப் பெரும்பாலான நிறுவனங்கள் வேலைக்கு விண்ணப்பிப்பவர்களின் 'ரெஸ்யூம்'களைக் (தன்விவரக் குறிப்பு) கணினிகொண்டே பிரித்து எடுக்கிறார்கள்.

ஆகவே, எப்போதும் 'டிஜிட்டல் ரெஸ்யூம்' ஒன்றை 'ஸ்க்ரீனிங் ஃப்ரெண்ட்லி'யாக வைத்திருப்பது முக்கியம். சமயங்களில் உங்களின் 'ரெஸ்யூம்'களை வேறு ஃபார்மட்டில் தயாரித்து அனுப்பும்போது, அந்த நிறுவனத்தில் அத்தகைய ஃபார்மட் இல்லாது போகின்றபட்சத்தில் தகுதி இருந்தும் உங்கள் 'ரெஸ்யூம்' எடுபடாமல் போகலாம்.

சில நிறுவனங்களில் மனிதர்கள் 'கேட் கீப்பர்'களாக இருப்பார்கள். அவர்கள் கேட்கிற கேள்விக்கு என்ன பதில் தர வேண்டுமோ அதை மட்டும் சரியாகச் சொல்லிவிட்டு, அடுத்த கட்டத்துக்குப் போகலாம்.

இங்கு உடல் மொழி, அதீத பணிவு இவை எல்லாம் தேவையே இல்லை. ஒரு காலி இடத்துக்கு அதிகமான விண்ணப்பங்கள் குவிகிற சமயத்தில், உங்களின் 'ரெஸ்யூம்'களை மிக ஆழமாக ஆராய்வார்கள். சிறு சந்தேகம் தென்பட்டால் கூட, உங்களை நீக்கிவிடும் வாய்ப்பு இருக்கிறது.

அதே போல உங்களையும் கேட்ட கேள்வியையே திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். சலிக்காமல் நேரிடையான பதில்களை மட்டுமே அளிக்கவும். 'ஓவர் குவாலிஃபைட்' ஆக இருக்கிறீர்களா என்பது முதல் உங்கள் பணி அனுபவங்கள் வரை அனைத்தையும் வடிகட்டுவதுதான் இந்த முதல் வகை நேர்காணல்!

சில டிப்ஸ்கள்...

 • உங்களின் தகுதி, திறமைகளை 'ஹைலைட்' செய்யுங்கள்.
 • சுற்றி வளைக்காமல் நேரிடையான, தேவையான பதில்களை மட்டும் அளிக்கவும்.
 • சம்பளம்பற்றிப் பேசும்போது 15,000 ரூபாய், 20,000 ரூபாய் என்று நிர்ணயித்த ஒரு தொகையைச் சொல்வதைவிடவும், '12 முதல் 15 ஆயிரம்', '15 முதல் 20 ஆயிரம்' என்று ஒரு ரேஞ்ச் வைத்துக்கொள்வது நல்லது.
 • தொலைபேசி மூலமாக அவர்கள் இன்டர்வியூ செய்யும்போது, கூடவே ஒரு குறிப்பு எடுத்துக்கொள்ள கையில் பேனா மற்றும் காகிதத்துடன் தயாராக இருங்கள். ஏனென்றால், நீங்கள் எப்போதும் அலர்ட்டாக இருக்கிறீர்களா என்பதைச் சோதிக்கவே, அது நடத்தப் படும்!

இன்பர்மேஷனல் இன்டர்வியூ The Informational Interview

முதல் வகை இன்டர்வியூ நேர் எதிரான முறை இது. தங்கள் நிறுவனத்தில் தற்சமயம் வேலை காலி இல்லை என்ற நிலை இருந்தாலும், நீங்கள் விண்ணப்பித்து இருந்தால், உங்களை ஒரு சந்திப்புக்கு அழைப்பார்கள். அந்த சந்திப்பில் உங்களுக்குத் தெரிந்ததையும், அவர்களுக்குத் தெரிந்ததையும் பரிமாறிக்கொள்வீர்கள்.

உங்களுக்கு குறிப்பிட்ட அந்த துறையைப்பற்றி என்ன தெரியும், அந்த துறையில் உங்களுக்கு உள்ள ஈடுபாடு எத்தகையது என்பதை எல்லாம் நிறுவனத்தினர் அறிந்துகொள்ளவே இந்த முறை நேர்காணல் பின்பற்றப்படுகிறது.

சில டிப்ஸ்கள்...

 • துறை சார்ந்தும், நிறுவனம் சார்ந்தும் என்னென்ன கேள்விகள் கேட்கலாம் என்பதை முதலிலேயே ஒரு ஹோம் வொர்க் செய்துகொண்டுபோவது நல்லது.
 • ரெஃபரன்ஸ்கள் (Reference) அளிக்கும்பட்சத்தில் முன்னமே அவர்களுக்குத் தெரியப்படுத்திவிட்டு, அவர்களின் பெயர்களைக் குறிப்பிடுவது நலம். இதனால் நேர் காணல் செய்பவருக்குச் சுலபமாக இருக்கும்.
 • உங்களின் ரெஸ்யூம்(Resume), விசிட்டிங் கார்டு போன்றவற்றைக் கொடுப்பது மூலம் அவர்கள் உங்களைத் தொடர்புகொள்வதற்கு ஏதுவாக இருக்கும்.
 • சந்திப்புக்குச் சென்று வந்தவுடன் ஒரு நன்றி தெரிவிக்கும் கடிதமோ, மெயிலோ அனுப்புவது நல்லது.

டைரக்டிவ் ஸ்டைல் இன்டர்வியூ The Directive Style

இப்படித்தான் நேர்காணல் செய்யப்போகிறேன் என்று எந்தவிதத் திட்டங்களும் முடிவுகளும் இல்லாமல் நடக்கும் நேர்காணல் முறை. இங்கு நீங்கள் மட்டுமல்லாமல் உங்களுடன் வந்திருக்கும் மற்ற போட்டியாளர்களையும் சேர்த்து ஒரே சமயத்தில் நேர்காணல் செய்வார்கள்.

உங்களுக்குக் கேட்கப்பட்ட அதே கேள்வி மற்றவரிடமும் கேட்கப்பட வேண்டும் என்ற நியதி இல்லையெனினும், எல்லோரிடமும் ஒரே கேள்வியை முன்வைக்கும்போது நீங்கள் அனைவரும் தருகிற பதில்களை அப்போதே ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு வசதியாக இருக்கும்.

கொஞ்சம் கடினமாகவே இந்த முறை நேர்காணலின்போது நடந்துகொள்வார்கள். இதனால் அவர்கள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதாக நினைக்க வேண்டாம். ஆயினும் இன்டர்வியூ செய்பவர் உங்கள் மேற்பார்வையாளர் என்பதை மறந்துவிட வேண்டாம்.

சில டிப்ஸ்கள்...

 • நேர்காணல் செய்பவருடன் அனுசரித்துச் செல்வது நல்லது. அவர் தரும் லீடுக்கு ஏற்பச் செயல்படுவது உசிதம்.
 • எந்த ஒரு நிலையிலும் நேர்காணல் உங்கள் கையை மீறிப் போய்விடாதபடிக்குக் கவனமாக இருங்கள். நேர்காணல் செய்பவர் உங்களிடம் எந்த ஒரு கேள்வியும் கேட்காதபோது மிகவும் மென்மையாக இடைமறிக்கவும். ஒரு விண்ணப்பதாரராக உங்களின் 'சுப்பீரியாரிட்டி'யைக் காட்ட வேண்டிய இடம் இது.

மென்ட்ரிங் ஸ்டைல் The Meandering Style

இந்த முறையானது வழமையாக அனுபவமற்ற நேர்காணலிடுபவர்களினாலேயே மேற்கொள்ளப்படும். நீங்கள் ஏற்கனவே எதிர்பார்த்தது போலவே கலந்துறையாடல் நடைபெரும்.

“உங்களைப் பற்றி சொல்லுங்களேன்”போன்ற வார்த்தகைள் மூலம் ஆரம்பிக்கலாம். இது உங்களை பற்றி கூறுவதற்கான வாய்ப்பாகும். இது நீங்கள் புத்திசாலி என்பதை சிறப்பா வெளிகாட்ட உதவும்.

சில டிப்ஸ்கள்...

 • நீங்கள் உஙகள் திறமையை, குணங்கள் மற்றும் அனுபவங்களை மாத்திரம் கூறுங்கள்.
 • நேர்காணல் செய்பவரினை நேராக பார்த்து உறையாடுங்கள்.
 • நீங்கள் அந்த நிறுவனத்தினை பற்றி அறிந்து கொண்டு செல்லுங்கள்

ஸ்ட்ரெஸ் இன்டர்வியூ The Stress Interview

உங்களின் பொறுமையைச் சோதிக்கவே இந்த வகை நேர்காணல் நடத்தப்படும். நீங்கள் சொல்கிற எந்த ஒரு தகவலுக்கும் எந்த விதமான எதிர்வினையும் காட்டாமல் இருப்பது, முறைத்துப் பார்ப்பது, செய்ய முடியாத காரியங்களைச் செய்யச் சொல்வது என கிட்டத்தட்ட ஒரு கல்லூரி ராகிங் போன்றது இந்த இன்டர்வியூ.

எந்த கஷ்டத்திலும் நீங்கள் எவ்வளவு தூரம் தாக்குப் பிடிக்கிறீர்கள் என்பதுதான் இதன் அடிநாதம். நீங்கள் 'ரெஸ்பான்ஸிவ்' ஆக இருக்கிறீர்களா... அல்லது 'ரியாக்டிவ்' ஆக இருக்கிறீர்களா என்பது இங்கு முக்கியம். காரணம், முன்னது, வேலைக்குச் சரியான ஆள் என்பதைத் தெரிவிப்பது. பின்னது, தகுதியில்லைஎன்பதைத் தெரிவிப்பது.

சில டிப்ஸ்கள்...

 • இது ஒரு விளையாட்டுதானே தவிர, பெர்சனலாக உங்களை அவமதிக்கும் செயல் அல்ல என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
 • நிதானமாக இருங்கள். படபடப்போ, பயமோ இருந்தால் நீங்கள் சொல்ல வருவது சரியாகப் போய்ச் சேராது.

பிஹேவியரல் இன்டர்வியூ The Behavioral Interview

நீங்கள் குறிப்பிட்ட ஒரு பணிக்கு மனதளவிலும், நடத்தை அளவிலும் தகுதியானவரா என்பதை ஆராய இந்த வகை நேர்காணல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. உதாரணத்துக்கு, தரம் சம்பந்தப்பட்ட ஒரு வேலைக்கு கடினமான ஒரு நபரைத் தேர்வு செய்வார்கள். காரணம், தரத்தில் காம்ப்ரமைஸ் செய்யக் கூடாது.

மனித வளத் துறையில் 'பீப்பிள்-ஓரியன்டட்' ஆக இருக்க வேண்டும். அங்கே கடினமாக இருப்பது வேலைக்கு ஆகாது. உற்பத்தித் துறையில் 'பெர்ஃபெக்ட்' எதிர்பார்க்கப்படும். மார்க்கெட்டிங் துறையில் விட்டுக்கொடுத்துப் போக வேண்டி இருக்கும். ஆகவே, அப்படிப்பட்ட நபர்களைத் தேர்வு செய்வார்கள்.

இந்த வகை நேர்காணல்களில் படிப்பு என்பதைவிட, உங்கள் நடத்தைதான் முக்கியமாக எடுத்துக்கொள்ளப்படும்.

சில டிப்ஸ்கள்...

 • நீங்கள் நீங்களாக இருங்கள். நடிக்க வேண்டாம்.
 • படிக்கும்போதும், முன்னர் பார்த்த வேலையின்போதும் நீங்களாக மேற்கொண்ட சில முனைப்புகளை எடுத்துக் கூறுங்கள். அவை நிறுவனத்தின் வளர்ச்சிக்கோ அல்லது சமூக நலன் சார்ந்ததோகூட இருக்கலாம்.
 • உங்களின் அனுபவங்களை 'வளவள' என்று அளக்க வேண்டாம். இரண்டு நிமிடங்களுக்குள் பேசி முடிப்பது நல்லது.

இன்டர்வியூவுக்குப் போனோம்... வந்தோம்... அதோடு நம் வேலை முடிந்தது என்று இருக்காமல், தொடர்ந்து அந்த நிறுவனத்தை ஃபாலோ-அப் செய்வது, உங்களின் நிலைபற்றி அறிந்துகொள்வது, நீங்கள் தேர்வு பெறாவிட்டாலும் இன்டர்வியூவில் நீங்கள் செய்த தவறுகள் என்ன, அதை எப்படித் திருத்திக்கொள்வது என்பன போன்றவற்றை எல்லாம் நேர்காணல் நடத்தியவருடன் விவாதித்து அலசுவது உங்கள் மீதான ஒரு நன்மதிப்பை உயர்த்தும்!

இன்டர்வியூவில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று பயிற்சிகள் நடத்திக்கொண்டு இருக்கிற காலத்தில் இன்டர்வியூவை எப்படி நடத்த வேண்டும் என்று பாடம் எடுத்து வரும் 'கெம்பா' கார்த்திகேயன் மேலும் சில வகையான இன்டர்வியூ வகைகளைப்பற்றி நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

"நார்மலான சூழ்நிலையில் எல்லோரும் சமமாக, நல்லவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால், அப்நார்மலான சூழ்நிலையில் நீங்கள் எப்படி மாறுகிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ளவே 'ஸ்ட்ரெஸ்', பிஹேவியரல் போன்ற இன்டர்வியூக்கள் நடத்தப்படுகின்றன. காரணம், உங்களின் உண்மையான குணம் இதில் வெளிப்பட்டுவிடும்.

குரூப் இன்டர்வியூ The Group Interview

மற்றவர்களை நீங்கள் எவ்வாறு நடத்துகிறீர்கள் என்பதை அறிய இந்தக் குழு நேர்காணல் நடத்தப்படுகிறது. அதிகம் வாதாடக் கூடியவரா, மற்றவர்களுக்கு வாய்ப்புத் தருபவரா என்று இது கிட்டத்தட்ட ஒரு குழு விவாதம்போலவே நடைபெறும். குழுவாகச் செயலாற்றும்போது நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை இதன் மூலம் அறிய முடியும் என்பதால் கவனம் தேவை.

சில டிப்ஸ்கள்...

 • நேர்காணல் நடத்துபவர் உங்களிடம் எதை எதிர்பார்க்கிறார் என்பதை அறிந்துகொள்ளவும்.
 • மற்ற விண்ணப்பதாரர்களை மரியாதையுடன் நடத்துங்கள்.
 • அதிகாரம் செலுத்துவது உங்களைப் பக்குவம்அற்ற மனிதராகக் காட்டிவிடும்.

டேக் டீம் இன்டர்வியூ Tag Team Interview

ஒரே சமயத்தில் பலர் உங்களை அடுத்தடுத்துக் கேள்விகள் கேட்டு உங்களைத் திணறவைப்பார்கள். சில நிறுவனங்களில் ஒருவரிடம் இன்டர்வியூ முடிந்தவுடன், அடுத்தவரிடம் இன்டர்வியூவுக்குச் செல்ல வேண்டும். யார், எப்படிக் கேள்விகேட்டாலும் நீங்கள் சமநிலை தவறாமல் இருக்கிறீர்களா என்பதை இதன் மூலம் அறிந்துகொள்வார்கள்!

சில டிப்ஸ்கள்...

 • ஒவ்வொருவரையும் மிக முக்கியமான நபராகக் கருதுங்கள். பர்சனாலிட்டியைவைத்து எடை போட வேண்டாம்.
 • அனைவருக்கும் பொதுவாக வணக்கம் வைக்கவும். தனித் தனியாக வணக்கம்வைத்தால் நேரம் வீணாகும். இது குழுவாக உங்களை நேர்காணல் செய்யும்போது மட்டும்.
 • ஒருவரிடம் நிறுவனத்தைப்பற்றி கேள்வி கேட்கையில் அவரைச் சிக்கலிலோ, முகச் சுளிப்பையோ ஏற்படுத்துகிற சூழலில் தள்ளிவிட வேண்டாம்.

மீல் டைம் இன்டர்வியூ The Mealtime Interview

'சும்மா சாப்பிடுங்க பாஸ்' என்று நேர்காணல் செய்பவர் உங்களை பிஸ்கட்டோ, கேக்கோ அல்லது டிபனோ கொடுத்து நீங்கள் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் வேளையில் எதாவது ஒரு கேள்வி கேட்பார். பதில் சொல்ல வேண்டுமே என்று நீங்கள் பதறுவீர்கள். சாப்பிடவும் வேண்டும், அதே சமயம் பதிலும் சொல்ல வேண்டும் என்கிற அந்தச் சூழ்நிலையை நீங்கள் எப்படிச் சமாளிக்கிறீர்களோ அதைப் பொறுத்து உங்களின் சாமர்த்தியம் நிர்ணயிக்கப்படும்.

மேலும், பல பர்சனலான விஷயங்களைப் பேசவும் இந்த மீல் டைம் இன்டர்வியூ மேற்கொள்ளப்படும். 'ஹெட் ஹன்டிங்' எனப்படும் ஏற்கெனவே ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருப்பவரைத் தங்கள் நிறுவனத்துக்கு வந்துவிடுங்கள் என்று அழைக்க, இந்த வகை நேர்காணல்கள் கார்ப்பரேட் உலகில் மிகப் பிரபலம்!

சில டிப்ஸ்கள்...

இந்த வகை இன்டர்வியூக்களின்போது உங்களை ஒரு விருந்தினராகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அவர் சாப்பிட ஆரம்பிக்கும் முன் நீங்கள் சாப்பிடா தீர்கள். அதே போன்று அவர் சாப்பிடாமல் இடைவெளி விடும்போது நீங்களும் இடைவெளி விடுங்கள்.

டயட் போன்ற விஷயங்களை இங்கே எடுத்து வர வேண்டாம். அவர் எதை ஆர்டர் செய்கிறாரோ, அதை எடுத்துக்கொள்வது நல்லது.

அவர் ஆர்டர் செய்தது உங்களுக்குக் குமட்டல் போன்றவற்றை ஏற்படுத்தும் என்கிறபட்சத்தில் அதை மென்மையாகத் தவிர்க்கவும். உங்களை ஆர்டர் செய்யச் சொன்னால், ரொம்ப ஹெவியாக இல்லாமல் 'லைட்'டாக ஆர்டர் செய்யவும்.

உணவு ஏற்பாடு செய்ததற்கு நன்றி தெரிவிக்க மறக்க வேண்டாம்.

பாலோ-அப் இன்டர்வியூ The Follow-up Interview

மேற்கண்ட இத்தனை வகை இன்டர்வியூக்களிலும் தேறிவிட்ட பிறகும் 'ஷார்ட் லிஸ்ட்' செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு இடையே யார் சிறந்தவர் என்று முடிவெடுக்க இந்த இன்டர்வியூ நடத்தப்படும்.

எந்த ஓர் அலட்சியமும் இல்லாமல் முதல் நாள் இன்டர்வியூவுக்கு எந்த அளவு ஆயத்தமாகச் சென்றீர்களோ அதே அளவு தயாரிப்புகளுடன் இந்த ஃபாலோ-அப்புக்கும் செல்லுங்கள். நிறுவனத்தின் கல்ச்சர் பற்றி நீங்கள் அறிந்துகொள்ள இது உதவியாக இருக்கும்.

சில டிப்ஸ்கள்...

 • உங்களின் நிலையைத் தைரியமாக, தெளிவாகச் சொல்லவும்.
 • சம்பளம்பற்றிப் பேசுகையில் உடும்புப் பிடியாக இருக்க வேண்டாம்.
 • இறுதியாக ஒரு விஷயம்... இன்டர்வியூவுக்கு தயார்படுத்துவது என்பது அரை மணி நேரத்தில் ஒரு பெண்ணை மயக்குவது போன்றது அல்ல. உண்மையைச் சொல்லப்போனால் உங்களை இன்டர்வியூவுக்கு யாரும் தயார்படுத்த முடியாது.

இயற்கையிலேயே தன்முனைப்பும், நம்பிக்கையும் இருந்தால் அது நேர்காணலில் பிரதிபலிக்கும். நடிப்பதை விட்டுவிட்டு நிஜமாக இருங்கள். நீங்கள் ஜெயிப்பீர்கள்!

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments