கிழக்கு மாகாணத்திலுள்ள மருந்துக் கலவையாளர் வெற்றிடங்களை நிரப்பக் கோரிக்கை

Report Print Reeron Reeron in வேலைவாய்ப்பு

கிழக்கு மாகாணத்திலுள்ள அரச சேவைகளில் அதிகளவான வெற்றிடங்களும் உரிய அரச சேவையினை வழங்குவதற்கு தேவையான அரச உத்தியோகஸ்தர்கள் காணப்படாதது பாரிய சாவாலாகும்.

யுத்தம் நிறைவடைந்து கிழக்கு மாகாணம் புத்துயிர் பெற்று வரும் நிலையில் அம்மக்களின் உயிரினைக் காக்கும் மருத்துவ சேவையினை வழங்கி வரும் கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் ஆள் பற்றாக்குறை நிலவுவது கவலைக்குரிய விடயமாகும்.

கிழக்கு மாகாணத்திலுள்ள பல வைத்தியசாலைகளில் நோயாளி ஒருவருக்கு வைத்தியர் பரிந்துரை செய்கின்ற மருந்துகளை வெளிநோயாளர் பிரிவுகளில் வழங்குவதற்கான உரிய அதிகாரியான, மருந்துக் கலவையாளர் இல்லாத நிலையில் பல சிரமங்களுக்கு மத்தியில் வெளிநோயாளர் பிரிவில் தகுதியான சுகாதார பணியாளர்கள் மூலமாக மருந்துகள் இன்றும் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையினை ஓரளவேனும் போக்கும் முகமாகவும், வெற்றிடங்களை நிரப்பும் முகமாகவும் கடந்த 02.11.2016 கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் வைத்து இலங்கையின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் நாடுபூராகவும் உள்ள 338 மருந்துக் கலவையாளர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட்டங்களில் 56 வெற்றிடங்கள் காணப்படுகின்ற போதிலும், கிழக்கு மாகாண சுகாதார பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற 34 மருந்துக் கலவையாளர்கள் நியமனம் வழங்கி வைக்கப்பட்ட நிலையில் அவர்களுள் 11 பேர் வெளி மாகாணத்திற்கும் 4 பேர் கிழக்கு மாகாணத்திலுள்ள மத்திய அரசின் கீழ் உள்ள வைத்தியசாலைக்கும் நியமிக்கப்பட்டு 19 பேர் கிழக்கு மாகாண சுகாதார பணிமனை ஊடாக வைத்தியசாலைகளை தெரிவு செய்து கொள்ளும் படி நியமிக்கப்பட்டனர்.

கடந்த 04.11.2016 நியமனங்களை பெற்றுக் கொள்ளும் முகமாக 19 மருந்துக் கலவையாளர்கள் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுக்கு ஊடாக கிழக்கு மாகாண சுகாதார பணிமனைக்கு சென்றிருந்த நிலையில் வெற்றிடங்கள் நிலவும் பகுதிகளுக்கு நியமனம் வழங்கப்படாத நிலையில் நியமன இடங்களை தெரிவு செய்ய மீண்டும் கடந்த(8) திகதி அழைப்பு விடுந்திருந்த நிலையில் பின்னர் திகதி மாற்றப்பட்டு நேற்று(09) அழைக்கப்பட்டனர்.

இன்றைய நாளும் சரியான வெற்றிடங்களுக்கு உரிய இடங்களுக்கு நியமிப்பது தொடர்பில் குழப்பகரமான நிலை எழுந்த நிலையில் இன்று(10) மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பணிமனைக்கு பயிற்சி நெறிக்காக அழைக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(12) திகதி உரிய இடங்களை தெரிவு செய்வதற்காக மீண்டும் திருகோணமைலைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் 56 வெற்றிடங்கள் உள்ளன. மத்திய அரசினால் 19 மருந்து கலவையாளர்கள் கிழக்கு மாகாணத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் இவர்களுக்குரிய வைத்தியசாலைகள் வழங்கப்படாமல் குழப்பகரமான நிலை ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பல வருடகாலமாக கிழக்கு மாகாணத்தின் அம்பாறையின் சிங்கள பகுதிகளில் உள்ள வைத்தியசாலை மற்றும் திருகோணமலையில் உள்ள 17 வைத்தியசாலைகளில் கடமை புரியும் மருந்து கலவையாளர்களை அவர்களுடைய சொந்த பிரதேசமான வெளி மாகாணங்களுக்கு இடமாற்றம் செய்து புதிதாக கிழக்கு மாகாணத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள மருந்து கலவையாளர்களை பதிலீடாக அவர்களுடைய இடங்களுக்கு நியமிக்குமாறு அவர்களால் கோரப்பட்டுள்ள நிலையில் இந்த இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசினால் இவர்களுக்கு பதிலீடாக மருத்துக் கலவையாளர்களை வழங்காத நிலையிலும் இம் மாகாண பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களை கூட வெளி மாகாணத்திற்கு நியமித்துள்ள நிலையில் இம் மாகாணத்தில் சேவையாற்றும் மருந்துக் கலவையாளர்களுக்கு பதிலீடுகள் இல்லாமால் கிழக்கு மாகாணத்திற்கு வழங்கப்பட்டுள்ள மருந்துக் கலவையாளர்களை பதிலீடு செய்ய வேண்டுமென கோருவது ஏற்றுக் கொள்ள முடியாததுடன் புதிதாக 19 பேர் கிழக்கு மாகாணத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் இங்கு கடமை புரிகின்றவர்கள் 17 பேர் வெளி மாகாணத்திற்கு செல்ல கோரும் நிலையில் 2 பேரினை மாத்திரமா இம்முறை மத்திய அரசு இங்கு வழங்கியுள்ளது என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

இவ்வாறு பதிலீடு மேற்கொள்ளப்படுமாக இருந்தால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒருவரைக் கூட நியமிக்க முடியாத நிலை ஏற்படுமென பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.

தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் பல பகுதிகளில் வெற்றிடங்கள் நிரப்பபடாமல் உள்ள நிலையில் குறித்த சிங்கள பிரதேசங்களுக்கு மாத்திரம் புதியவர்களை பதிலீடாக வழங்குவதென்பது ஏற்றுக் கொள்ள முடியாதென குறிப்பிடுகின்றனர்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மருந்துக் கலவையாளர்களை கிழக்கு மாகாணத்திலுள்ள வெற்றிடங்களுக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது பயிற்சி பெற்று வரும் மற்றுமொரு தொகுதி மருந்து கலவையாளர்களில் கிழக்கு மாகாண வெற்றிடத்துக்கு ஏற்ப அவர்களையும் பெற்றுக் கொள்ள மாகாண அமைச்சு நடவடிக்கை எடுப்பதுடன் நீண்ட காலம் வைத்தியசாலைகளில் கடமை புரியும் மருந்துக் கலவையாளர்களுக்கு மாற்றீடாக மேலதிகமாக மருந்துக் கலவையாளர்களை கிழக்கு மாகாணத்திற்கு பெற்றுக் கொள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கிழக்கு மாகாணத்திற்கு வழங்கப்பட்டுள்ள மருந்து கலவையாளர்களை சிங்கள பகுதிகளுக்கு நியமிப்தனையும், வெளிமாகாணத்திற்கு செல்பவர்களுக்கு பதிலீடாக நியமிப்பனையும் தவிர்த்து கிழக்கு மாகாணத்தில் வெற்றிடம் நிலவும் 56 வைத்தியசாலைகளில் அதி முக்கிய வைத்தியசாலைகளுக்கு நியமிக்க வேண்டும்.

வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஏற்றவாறும் பதிலீடாக மேலதிகமாக மருந்துக் கலவையாளர்களை வழங்கும் போதும் அவர்களுக்கு பதிலீடுகளை வழங்கி கிழக்கு மாகாணத்தின் சுகாதார சேவையினை மேலும் வளப்படுத்த கிழக்கு மாகாண முதலமைச்சர் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிழக்கு மாகாண கல்விச் சமூகம் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments