சசிகலா நாளை விடுதலை: மருத்துவமனை வெளியிட்ட முக்கிய அறிக்கை

Report Print Arbin Arbin in இந்தியா
0Shares

சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா அதிகாரபூர்வமாக விடுதலையாகிறார்.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா இவரது உறவினர் இளவரசி, சுதாகரன் ஆகியோர், 2017 ஆண்டு முதல் சிறை வாசம் அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சசிகலாவுக்கு கடந்த வாரம் சிறையில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டது.

அவருடன், சிறையில் ஒரே அறையில் தங்கியிருந்த இளவரசியும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. இருவருக்கும் பெங்களூரில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சசிகலாவுக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை என்றும், உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கர்நாடக சிறைத்துறை விதிமுறைப்படி விடுமுறைகள் அனைத்தும் கழித்து சசிகலாவின் நான்கு ஆண்டுகள் தண்டனை காலம் இன்றுடன் முடிவடைகிறது.

இதனால், சிறை அதிகாரிகள் சசிகலா சிகிச்சை பெறும் வார்டுக்கு, இன்று காலை நேரில் சென்று விடுதலை ஆகும் கோப்பில் அவரிடம் கையொப்பம் பெறவுள்ளனர்.

இதன் மூலம், அதிகாரபூர்வமாக அவர் 26 ம் திகதி விடுதலையாகிறார். இதன் நகல் ஒன்றை, மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கி, தங்கள் கட்டுப்பாட்டில் அவர் இல்லை என்று அதிகாரிகள் தெரிவிப்பார்கள்.

மட்டுமின்றி, அவரது பொலிஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்படும். சிறையில் உள்ள அவரது உடமைகள் பெற்றுகொள்வதற்கு யாரை பரிந்துரைக்கிறாரோ, அவரிடம் ஒப்படைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன.

கொரோனா சிகிச்சை பெறுவதால், குணமடைந்த பின்னரே அவர் தமிழகம் புறப்படுவார் என தெரிய வந்துள்ளது.

மேலும், பிப்ரவரி 5 ல், இளவரசி விடுதலையாவதாக கூறப்படுகிறது. நேற்று மாலை வரை சுதாகரன் தரப்பில் அபராத தொகை செலுத்தவில்லை. இதனால், அவரது விடுதலை கேள்விக்குறியாக உள்ளது.

இந்த நிலையில், சசிகலா உடல் நிலை தொடர்பில் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது,

அதில், சசிகலாவுக்கு ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு சீரானது. சுவாச கருவி இன்றி சசிகலா இயல்பாக சுவாசிக்கிறார்.

காய்ச்சல், மூச்சு திணறல், ரத்த அழுத்தம் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளில் இருந்து முழுமையாக குணமடைந்தார்.

தொடர்ந்து அறிகுறிகள் இல்லாத கொரொனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சசிகலா உடல்நிலையில் தொடர்ந்து நல்ல முன்னேற்றம். சிகிச்சைக்கு உடல் ஒத்துழைக்கிறது என குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்