ஒடிசாவில் 58 வயது பெண் ஒருவர் தனது சொந்த மகளையே கூலிப்படை அமைத்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாநிலம் ஒடிசாவில் ஜனவரி 12-ஆம் திகதி, நாகிராம் கிராமத்தில் ஒரு பாலத்தின் அடியில் ஒரு பெண்ணின் சடலம் கிடைத்தது. அப்பெண் கற்கள் மற்றும் சில கடினமான பொருட்களால் தாக்கப்பட்டு கொடூரமாக கொலைசெய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த பலாசூர் பொலிஸார், சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கொலைசெய்யப்பட்ட பெண் பலாசூரைச் சேர்ந்த ஷிபானி நாயக் (36) என தெரியவந்தது. மேலும் விசாரணையில் இந்த கொலையில் பிரமோத் ஜனா (32) என்பவருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பிரமோத் ஜனாவை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் தானும் அவருடைய 2 கூட்டாளிகளும் இணைந்து இந்த கொலையை செய்ததாக ஒப்புக்கொண்ட பிரமோத் ஜனா, இதனை எதற்காக செய்தார் என்பதை கூறியபோது அதிர்ச்சியூட்டும் உண்மை வெளிவந்தது.
ஷிபானி நாயக்கை அவரது சொந்த தாய் சுகுரி கிரி (58) என்பவர் தான் பணம் கொடுத்து கொல்லச்சொன்னதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதற்காக 50,000 ரூபாய் கொடுப்பதாக ஒப்புக்கொண்ட கிரி, முன்பணமாக ரூ. 8,000 கொடுத்துள்ளார் என்பதையும் பிரமோத் ஜனா கூறினார்.
இதனையடுத்து, கொலைசெய்யப்பட்ட பெண்ணின் தாய் சுகுரி கிரியை போலீசார் கைது செய்தனர். சொந்த மகளைகே கொன்றதற்கான நோக்கம் என்னவென்று பொலிஸார் அவரிடம் விசாரித்தனர்.
அப்போது, தனது மகள் சட்டவிரோதமாக மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டதாகவும், அவரை பலமுறை கண்டித்தும் கேட்காமல், தொடர்ந்து தொழிலை நடத்திவந்ததாகவும் கிரி கூறினார்.
பல வழிகளில் ஷிபானியை இந்த தொழிலிலிருந்து மீட்க முயற்சி செய்தும், எதுவும் பலனளிக்காததால் வெறுப்பின் உச்சிக்கு சென்ற கிரி, மகளை கொலைசெய்ய முடிவெடுத்ததாக பொலிஸில் ஒப்புதல் அளித்தார்.
இப்படி, தாய் ஆத்திரத்தில் சொந்த மகளை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரமோத் ஜனாவுடன் கொலையில் ஈடுபட்ட மற்ற 2 பேர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களையும் விரைவில் பிடிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.